பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில், ஆட்சி நிர்வாகம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று தலைதூக்கியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து தயாரிக்கப்படும் உளவுத்துறை அறிக்கைகளை, முதல்வர் விஜயின் பார்ப்பதற்கு முன்பே சிலர் படிக்கிறார்களாம். அவர்கள் பார்த்த பின்னர் தான் விஜயின் டேபிளுக்கு செல்கிறது எனக் கூறி அதிர வைக்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
பொதுவாக எந்த அரசாக இருந்தாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையின் உளவுப்பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வது வழக்கமான நடைமுறையாகும்.

அந்த அறிக்கைகள் வாரம் ஒருமுறை அல்லது மாதத்திற்கு இருமுறை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். இதன் மூலம் அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தின் நிலை குறித்து முதல்வர் நேரடியாக அறிந்து கொள்வார்.
இந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கண்காணிக்க தனியாக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்
அந்த குழு தயாரிக்கும் அறிக்கைகள் ஆரம்பத்தில் நேரடியாக முதல்வர் விஜயின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வரின் அரசியல் வியூக ஆலோசகராக கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி, தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வருகை தருவதாகவும், உளவுத்துறை அறிக்கைகள் முதல்வரிடம் செல்வதற்கு முன்பாக அவற்றை அவர் பார்வையிடுவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
உளவுத்துறை அறிக்கை
இதுமட்டுமல்லாமல், சில முக்கிய தகவல்கள் தொடர்பாக உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் நேரடியாக விளக்கமும் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மற்றும் முதல்வரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரும் சில அறிக்கைகளை தங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்வதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்த விவகாரம் தற்போது நிர்வாக வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி
காரணம், உளவுத்துறை அறிக்கைகள் என்பது மிகுந்த ரகசிய தன்மை கொண்ட ஆவணங்களாக கருதப்படுகின்றன. அவை அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றவர்களின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நீண்டகால நடைமுறையாகும். இதுகுறித்து சில முன்னாள் அதிகாரிகள் கூறுகையில், "முதல்வர் அல்லது அரசு அதிகாரப்பூர்வமாக நியமித்த உதவியாளர் மட்டுமே இத்தகைய அறிக்கைகளை முதலில் பார்வையிட வேண்டும். அதற்கு முன்பாக வேறு யாராவது அவற்றை அணுகினால், தகவல் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்" என எச்சரிக்கின்றனர்.
ரகசிய தகவல்கள்
அதேநேரத்தில், கடந்த கால அரசுகளிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாக அரசியல் வட்டாரங்கள் நினைவுபடுத்துகின்றன. ஆட்சியின் 'மைய' அதிகாரத்தைச் சுற்றியுள்ள நெருங்கிய நபர்கள், முக்கிய அறிக்கைகளை முன்கூட்டியே பார்வையிட்டதாக அப்போதும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது தவெக அரசு மீது இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அரசின் ரகசிய தகவல்கள் பாதுகாப்பாக கையாளப்படுகிறதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.
முதல்வர் அலுவலகம்
குறிப்பாக ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இத்தகைய தகவல்கள் வெளியாகியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும், முதல்வர் விஜயின் பார்வைக்கு செல்லும் முன்பாக உளவுத்துறை அறிக்கைகளை யார் யார் ஆய்வு செய்கிறார்கள் என்ற கேள்வி அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக விஜய் கவனத்தில் கொள்ள வேண்டுமென்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications
