“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார்
சென்னை: "தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து என செய்திகள் தானாகவே போடப்படுகிறது.. யாருடைய பேச்சின் அடிப்படையில் வெளியிடுகிறார்கள் என தெரியவில்லை. விஜய் 24 மணி நேரமும் களத்தில் இறங்கத் தயார்" என தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஓரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல்முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டசபை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் தவெக களம் காண்கிறது. தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வுகள் திடீர், திடீரென ரத்து செய்யப்பட்டு வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த வாரத்தில் மட்டும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசும் இடத்திற்கு செல்லாததால் பேசாமல் திரும்பினார். கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், "பிரச்சாரம் ரத்து என செய்திகள் தானாகவே போடப்படுகிறது. எதுவுமே ரத்து ஆகவில்லை. அது தவறான செய்தி. நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கு. அது முற்றிலும் தவறான செய்தி. எங்கேயும் நாங்கள் கடலூர் போகிறோம் என அறிவிக்கவே இல்லை. கடலூருக்கு வேறு ஒரு நாள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் புதுச்சேரி தேர்தல் காரணமாக அவர்கள் அங்கே அனுமதி கொடுக்கவில்லை. அதனால் வேறு ஒரு நாள் முடிவு செய்தோம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் செய்திகள் தானாகவே போடப்படுகிறது.
நிறைய நியூஸ் சேனல்ல அது யாருடைய இன்ஃப்ளூயன்ஸ்ல போடுறாங்கன்னு தெரியல. அவங்களே போடுறாங்க, அவங்களே ரத்துன்னு போடுறாங்க. இப்ப நான் ஒரு தேதி போட்டு கொடுக்கறேன்னு வச்சுக்கோங்க. ஒரு நாள் கழிச்சு ஒரு நாள் முன்னாடி வந்து "இந்த இடம் உங்களுக்கு சரியா இருக்காது, வேற இடத்தை தேர்வு செய்யுங்க"ன்னு சொல்லுவாங்க. நான் திரும்ப வேற இடம் தேர்வு செய்றதுக்குள்ள அந்த நாள் முடிஞ்சு போயிரும். இப்ப இதான் எங்களுக்கு பிராக்டிக்கல் டிஃபிகல்ட்டி சொல்றோம்.
அவங்க தேர்வு செய்த இடங்களை தேர்ந்தெடுத்தாலும் அவங்க என்ன சொல்லுவாங்க? உங்க கூட்டத்துக்கு செட் ஆகுதும்பாங்க. சோ இது எங்களுக்கு பிராக்டிக்கல் டிஃபிகல்டீஸ் இந்த ரெண்டு இடத்துல தான் வருது. அதை வந்து உடனே இப்ப நாங்க அப்ளை பண்ண உடனே, ஒரு 2 மணி நேரத்திற்குள் சொல்லிட்டாங்கன்னா நாங்க உடனே வேற தேதிகள், வேற இடங்கள் மாத்தி அப்ளை பண்ணிடுவோம். ஒரு நாள் கடந்து சொல்றப்பதான் அதனாலதான் எங்களுடைய அறிவிப்புகளும் எப்பயுமே கடைசி 12 மணி நேரம், 15 மணி நேரத்துல நாங்க அறிவிப்புகளே பண்றோம்.
எங்களுக்கு அப்ரூவல் எல்லாம் வந்து, கையில அந்த கண்டிஷன்ஸ் பேப்பர் எல்லாம் வந்த பிறகுதான் நாங்க அறிவிப்புகளே பண்ண முடியும். சோ இதான் எங்களுக்கு இருக்கிற நடைமுறை பிரச்சனை. பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை. தவெக தலைவர் விஜய் 24 மணி நேரமும் களத்தில் இறங்கத் தயார்.
நிறைய பேர் காரைக்குடியில விஜய் ஏன் பேசலன்னு கேட்டாங்க. ஏன்னா அனுமதியை மீறி பேசுறது எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல. ஆனால் அங்க வேற ஏதாவது பொதுமக்களுக்கு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாதுன்னு சொல்லிட்டுத்தான் விஜய் பேசவில்லை. ஒரே காரணத்துக்காகத்தான் கண்டிப்பாக என்ன இருக்குதோ, என்ன எங்களுக்கு காவல்துறையில வழிகாட்டி இருக்காங்களோ அதுக்குள்ள நாங்க நடந்துக்கணும்னு நினைக்கிறோம். எல்லாத்தையும் விட பொதுமக்களுடைய பாதுகாப்பு முக்கியம்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications