முதல்வர் விஜய் வழக்கு.. தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் ஜோசப் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோசப் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வர் விஜய் தனது வேட்பு மனுவில் சொத்துகளை மறைத்துள்ளதாகவும், தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக கடந்த வாரம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும், முதல்வர் விஜய்க்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில், முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
வேட்பு மனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது எப்படி விதிமீறலோ, அதேபோல சொத்து விவரங்களை மறைப்பதும் விதிமீறல் மட்டுமல்ல ஊழல் நடவடிக்கை. விவரங்கள் மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரி முழுமையான விசாரணை நடத்தமுடியாது. தேர்தல் வழக்கில் தான் இதுகுறித்து விரிவாக விசாரிக்க முடியும் என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிடப்பட்டது.
முதல்வர் விஜய் மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரு தரப்பும் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. இதையடுத்து, தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் ஜோசப் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.



Click it and Unblock the Notifications
