இதுதான் அவங்க பொருளை எடுத்து அவங்களயே போடுறது! திமுக -அதிமுகவை திணற வைக்கும் முதல்வர் விஜய்! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திமுகவின் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அம்மா உணவகம் திட்டத்தை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டிருப்பது அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக - அதிமுக என இரண்டு ஆட்சிகளின் திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் ஆதரவை பெற்று இருப்பதோடு எதிர்க்கட்சிகளை அரசியல் செய்ய விடாமல் விஜய் தடுத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும், அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

Vijay DMK AIADMK

சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய இந்தத் திட்டத்தை மீண்டும் சுறுசுறுப்பாக்கும் முயற்சி என ஒரு பக்கம் பார்க்கப்பட்டாலும், அதன் பின்னணியில் விஜய்யின் அரசியல் கணக்கும் இருக்கிறது என பேசப்படுகிறது.

விஜய் அரசு

தமிழகத்தில் கடந்த ஆட்சிகள் கொண்டு வந்த பல மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் காலத்திலேயே விஜய் வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே, "முந்தைய அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்" என்று அறிவித்தார்.

திமுக திட்டங்கள்

இதன் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண், மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டவை. இந்த திட்டங்களால் பல லட்சம் பெண்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் நேரடியாக பயனடைந்திருந்தனர்.

மகளிர் உரிமைத் தொகை

குறிப்பாக மாதந்தோறும் உரிமைத் தொகை பெற்ற பெண்கள், இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்தியவர்கள், மாணவர் நலத் திட்டங்களால் உதவி பெற்றவர்கள் என பலரும் இந்தத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால், இந்தத் திட்டங்களை தொடர்வதன் மூலம் அந்த ஆதரவை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கமும் விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக

ஒருவேளை இந்தத் திட்டங்களில் ஏதாவது ஒன்றை நிறுத்தியிருந்தால், அதனை திமுக அரசியல் ஆயுதமாக மாற்றியிருக்கும். அந்த வாய்ப்பையே விஜய் முன்கூட்டியே தடுத்துவிட்டார் எனவும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக ஆதரவாளர்களிடமும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்த ஒரு பகுதி மக்கள் கூட இந்த முறை தவெகவுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

அம்மா உணவகம்

மேலும், ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில் கூட அதிமுகவிடம் நேரடியாக ஆதரவு கேட்காமல் இருந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது முக்கிய மாற்றமாக பார்க்கப்பட்டது. அந்த சூழலில், அதிமுகவின் மிகச் சிறந்த திட்டமாக இருந்த அம்மா உணவகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்திருப்பது சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதிமுக ஆதரவாளர்களின் மனநிலையை புரிந்து கொண்ட விஜய்யின் சிறந்த அரசியல் அணுகுமுறையாக இதைப் பார்க்கின்றனர்.

ஜெயலலிதா

2013ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகங்கள், குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டமாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு ரூபாய்க்கு இட்லி, குறைந்த விலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற உணவுகள் வழங்கப்பட்டதால், தினக்கூலி தொழிலாளர்கள், முதியவர்கள், நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்ட பலரின் வாழ்க்கையில் இந்தத் திட்டம் முக்கிய இடம் பிடித்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்தத் திட்டம் உரிய கவனிப்பைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது.

திமுக அரசு

பல இடங்களில் கட்டிடங்கள் பழுதடைந்தன. உணவின் தரம் குறைந்தது என்ற புகார்களும் எழுந்தன. இந்த நிலையில், அம்மா உணவகங்களை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என்றும், தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், திமுக அரசு பெண்கள் மற்றும் மாணவர்களை கவர்ந்த திட்டங்களை கொண்டு வந்தது போல, அம்மா உணவகங்கள் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களிடம் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய திட்டமாக இருந்தது.

விஜய்க்கு பலன்

அதனை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம், அதிமுகவின் பாரம்பரிய ஆதரவாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற முடியும் என விஜய் கணக்கிடுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தின் அம்மா உணவக முறை பின்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குறைந்த விலை உணவகங்கள் தொடங்கப்பட்டன. அதனால், இந்தத் திட்டத்தை மீண்டும் சீரமைக்கும் முயற்சி நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியிலும் விஜய்க்கு பலன் தரக்கூடிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+