தஞ்சாவூர் மாப்ளை, மதுரை பங்கு, சென்னை மச்சி.. எந்த ஊர் வழக்கு எவ்வளவு அழகு.. விவாதமாகும் நீயா நானா
சென்னை: மதுரையில் எந்த சாதியினர் என்றாலும் பங்கு (பங்காளி) என்றும், தஞ்சை வட்டாரத்தில் மாப்பிள்ளை என்றும் .. கோவை பகுதியில் கண்ணு என்றும், சென்னையை பொறுத்தவரை மச்சான் என்று யாரை பார்த்தாலும் அழைப்பார்கள். ஊர் வழக்கில் தமிழ் எவ்வளவு அழகாக உள்ளது என்பது குறித்த நீயா நானா விவாதம் இப்போது பெரிய அளவில் பேசப்படுகிறது.
தமிழ் மொழி எல்லா பகுதியிலும் ஒன்று போல் பேசப்படுவது இல்லை. எழுத்து மொழி மட்டுமே ஒன்றாக இருக்கும். பேச்சு மொழி என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொர வட்டார வழக்கு இருக்கும். அந்த வட்டார வழக்கு என்பது வெறும் மொழி என்பதை தாண்டி, கலாச்சாரத்தை, உணர்வை, பாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில வழக்கங்கள், பழக்க வழக்கங்கள் பொதுவானதாகவே இருக்கும். மேலும் குறிப்பிட்ட சில வட்டார வழக்குகள் அவர்களின் கலாச்சாரத்தையும், பண்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. அப்படியான வட்டார வழக்கு குறித்து பிரபல தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி பொங்கலை முன்னிட்டு விவாதித்தது.
அதில் தமிழ் மக்கள் எந்த பகுதியிலும் சாதி, சமயம் பார்த்து மக்கள் பழகுவது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வட்டார வழக்குகள் இருப்பது வெளிப்பட்டிருக்கிறது. மதுரையைச் சேர்ந்தவர் பேசும் போது, தெரிந்தவர்கள், பிடித்தவர்கள் யாரை பார்த்தாலும் பங்காளி என்று அழைப்போம் என்றார். பங்காளி என்பது சுருங்கி தற்போது பங்கு என்று மதுரை வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது. அதாவது எல்லோரும் சகோதரர்கள் என்பதை மதுரை வழக்கு குறிக்கும் என்பதை அழகாக கூறினார்.
அடுத்தாக தஞ்சையை பற்றி பேசிய விஜய்டிவி பிரபலம், தஞ்சை வட்டாரங்களில் எல்லாரையும் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். மகனையும் அழைப்பார்கள், அவரது அப்பாவையும் அழைப்பார்கள்.. இங்க வாங்க மாப்பிள்ளை என்று பாசத்தோடும் உரிமையோடும் பழகியவர்களை அழைப்பது தஞ்சை வட்டாரத்தில் இன்று வரை இருப்பதாக கூறினார். அவர் கூறியதும் உண்மை தான். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதிளில் மாப்பிள்ளை என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது.
அடுத்ததாக சென்னையச் சேர்ந்தவரிடம் கேட்ட போது, சாதி, மதம் பார்க்காமல் யாரையும் மச்சான் என்று அழைப்பது சென்னையின் வழக்கம் என்றார். அதாவது சென்னையில் அதிகம் புழங்கும் வார்த்தையாக மச்சான் என்பதை சுருருக்கி மச்சி என்று அழைப்பது அதிகமாக உள்ளது. பிடித்தவர்கள், நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பழகியவர்கள் என யாரை பார்த்தாலும் மச்சி என்று அழைப்பது சென்னையின் வழக்கமாக உள்ளது..
இதேபோல் மதுரை, தேனி பகுதியில் இஸ்லாமியர்களை மாமா என்று பாசத்துடன் அழைக்கும் வழக்கம் இருப்பதை ஒரு பெண் நீயா நானா நிகழ்ச்சியில் நினைவுப்படுத்தினார்கள். அந்த வழக்கம் இன்று வரை அப்படியே இருக்கிறது.இப்படியாக நீயா நானா விவாதம் இருந்தது. இதுதவிர இன்னும் சில பகுதிகளில் வட்டார வழக்கும் இருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட கொங்கு பகுதியில் கண்ணு என்று அழைப்பார்கள்.. சிறியவர்கள் யாராக இருந்தாலும் சரி, தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, கண்ணு என்று அழைப்பார்கள்..அதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரிடம் பேசினாலும் கொங்கு பகுதியில் பாசத்தோடு மிகவும் மரியாதையாகவே பேசுவார்கள்.. இதுதான் கொங்கு வழக்கமாக உள்ளது..
திருநெல்வேலி சீமையிலும், கன்னியாகுமரியிலும் வாழ்வியலை சொல்லும் வகையில் வட்டார வழக்கு மிக அழகாக இருக்கும்.. அவர்களின் வட்டார வழக்கை எந்த ஊர் போனாலும் கைவிட மாட்டார்கள் என்பது கூடுதல் சிறப்பு.. கடைசியாக ஒரு விஷயம்... இப்போது இதுதான் அதிகமாக உள்ளது. ஆனால் சென்னைக்கு மட்டுமே இது பொருந்தும்.. தல என்று அழைப்பது சென்னையில் இப்போது அதிகமாக இருக்கிறது. சென்னையில் வா தல, போ தல, வாங்க தல, என்று தெரியாதவர்களை அழைக்க அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. இப்படியாக வழக்குகள் தமிழ்நாட்டில் உள்ளது.












Click it and Unblock the Notifications