பரந்தூர் விமான நிலையம் டூ நெய்வேலி விவகாரம் வரை.. முக்கிய பிரச்சினையை கையில் எடுத்த தவெக விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி விவகாரம், மீனவர்கள் பிரச்சினை என மக்களின் முக்கிய பிரச்சினைகளை தவெக விஜய் கையில் எடுத்துள்ளார். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோன்று பரந்தூர் விமான நிலையம் டூ நெய்வேலி விவகாரம் வரை முக்கிய பிரச்சினைகளை விஜய் கையில் எடுத்துள்ளார். தவெகவின் செயற்குழு கூட்டத்தில் நிறவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: -

vijay tvk tamilaga vettri kazhagam

சமூக நீதிக் கொள்கை தீர்மானம்

சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்

மாநிலத்திற்கான தன்னாட்சி (State Autonomy) உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.

விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு, இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

vijay tvk tamilaga vettri kazhagam

இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்

இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம்

கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று, கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம்

இலங்கை தொடர்பான விசயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல். நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள். தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும் என்பதை இச்செயற்குழு அறிவிக்கிறது.

vijay tvk tamilaga vettri kazhagam

மொழிக் கொள்கை தீர்மானம்

முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர், எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இங்கு நியமிக்கப்படுகிற எவருக்கும் எந்தவித உரிமையும் இல்லை.

மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி, எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக. மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு. எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது.

மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம்

அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்து, மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு இச்செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச் சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்

ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

vijay tvk tamilaga vettri kazhagam

மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம்

மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்

ஆளும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது. மக்கள் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டும் எங்களின் அரசியல் அணுகுமுறை அல்ல. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதுகிறோம்.

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது' வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.

ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2.376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.

இரங்கல் தீர்மானம்:

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தீராப் பற்றுடன், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள் சிலர் அண்மையில் மறைந்த நிகழ்வுகள். அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. இவர்களின் இழப்புகள், ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இயக்கத்திற்காகவும் கழகத்திற்காகவும் நீண்ட காலமாகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமான கழகப் போராளி புதுச்சேரி மாநில நிர்வாகி திரு. சரவணன் அவர்கள் மற்றும்

மாநாட்டில் பங்கேற்க வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் திரு. VL.சீனிவாசன் அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் திரு. JK.விஜய்கலை அவர்கள், கழகத் தோழர்கள் திரு. வசந்தகுமார் அவர்கள், திரு. ரியாஸ் அவர்கள், திரு. உதயகுமார் அவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கழகத் தோழர் திரு. சார்லஸ் அவர்கள் ஆகியோர் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய களப் பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

vijay tvk tamilaga vettri kazhagam

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ & மாணவிகள். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி, ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச், சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்

தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்கு சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகள் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு, இதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+