'வடமாநில தொழிலாளர்கள்'.. பொங்கி எழுந்த விஜயகாந்த்.. அரசை சாடியதுடன் நேரடியாக போலீசுக்கு கோரிக்கை
தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது எனவே தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வடமாநிலத்தவர்கள் சிலரால் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நகைக்கடை ஒன்றின் கதவை உடைத்து, 5 கோடி மதிப்பிலான நகைகளை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல் திருவண்ணாமலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்பட 4 ஏடிஎம்களில் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் ஹரியானா கொள்ளையர்கள். இப்படி அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த சில கும்பலால் நடந்து வருவதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

அபராதம்
அண்மையில் சேலம் அருகே ரயிலில் முன்பதிவு செய்த பெண்களின் இருக்கைகளில் அமர்ந்து இறங்க மறுத்த வடமாநில தொழிலாளர்கள். கோபமடைந்த பெண்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயில் ஓமலூரில் நின்றது. டிக்கெட் எடுக்காமல் அமர்ந்து கொண்டிருந்த 110 பேரை அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் நடுவழியில் இறக்கிவிட்டனர். ஆனால் ரயிலில் டிக்கெட் எடுக்காத 110 பேரை நடுவழியில் இறக்கிவிட்டதற்கு பதிலாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிப்பது அல்லது அபராதம் கட்டத்தவறினால் சிறைக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ரயில்வே போலீசார் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் வடமாநிலத்தவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பது குறையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வடமாநிலத்தவர்
இதற்கிடையே கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே நேற்று மோதல் ஏற்பட்டது, இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. முன்னதாக திருப்பூரிலும் வட மாநில தொழிலாளர்கள் சிலருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தனிப்பட்ட மோதல் ஏற்பட்டது. அப்போது தாக்கிக்கொண்ட வீடியோ வைரலானது. இப்படி அடுத்தடுத்து சம்பவங்களால் வடமாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கண்காணிக்க வேண்டும்
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், " தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

இரும்புக்கரம்
இதேபோல் சமீப காலமாக தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள விஜயகாந்த், தமிழக அரசு தூங்குகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி வாழவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications