Vinayagar Chaturthi 2025: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலம்.. சிறப்பு வழிபாடு
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அதிகாலையிலேயே குளித்து முடித்து பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்,.. தமிழகம் முழுவதிலுமுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன.. தொடர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இன்று பண்டிகை கொண்டாட்டம்
அந்தவகையில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தமிழகத்திலும் கோலாகல கொண்டாட்டம் அதிகாலையிலேயே துவங்கிவிட்டது..
தமிழகத்தின் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பலரும் குடும்பத்துடன் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த பண்டிகையை முன்னிட்டுதான், விநாயகர் சிலைகள் கடந்த 15 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளில், கோயில்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவி இந்த விசேஷ பூஜைகளை செய்து வருகிறார்கள்.. சில முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்வார்கள்.
கொழுக்கட்டை, லட்டு
வீடுகளிலும், களி மண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.. கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்கள் செய்து, படையலிட்டு, பழவகைகளை வைத்து, விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் மலர்மாலைகள் அணிவித்து வழிபாடுகள் நடக்கின்றன.
இப்படி பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 3ம் நாள், அல்லது 5ம் நாளில், அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால், இதற்கு முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.
அந்தவகையில், கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த வருடமும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது... மற்றபடி, புதிதாக சிலைகள் வைக்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்காக அனுமதி தரப்பட்டுள்ளது.. எனவே, இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் செய்துள்ளனர்.
பாதுகாப்பு போலீஸ்
இதற்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு போலவே இந்த வருடமும் சிலைகள் வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைப் பகுதிக்குள் சுமார் 700 சிலைகளுக்கும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைப் பகுதிக்குள் சுமார் 600 சிலைகளுக்கும் போலீசார் அனுமதி தந்துள்ளனர்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருக்கின்றன
இன்று வைக்கப்படும் சிலைகள் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பூஜை செய்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, சிலைகளை கடலில் கரைக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சிலைகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
சென்னை 2 ஆயிரம் போலீஸ்
சென்னையில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் பாதுகாப்புக்கு 16,500 போலீசார், 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சிலையை வைப்பவர்கள் விழா கமிட்டி அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நிர்வாகிகளை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், அதேபோல், அப்பகுதி போலீசாரும் ரோந்து சுற்றி வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையிலும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாநகர பகுதிகளில், 712 இடங்களில் சிலை வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் உட்பட, 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சிவகங்கை பிள்ளையார்ப்பட்டி
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நேற்று மாலை தேரோட்டம் வெகுசிறப்பாக நடந்தது.. இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் காட்சியளிக்கிறார். பிறகு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று மதியம் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications