அதிமுக-பாமக நடுவே நடந்த 'பேரம்'.. அன்புமணி ராமதாஸ் 'மைத்துனர்' பகீர்
சென்னை: அதிமுக-பாமக நடுவே நடைபெற்றது, கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்றும், கூட்டணி பேரம் என்றும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான எம்.கே.விஷ்ணு பிரசாத் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக நடுவே, நேற்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 7 லோக்சபா தொகுதிகளில் பாமக போட்டியிட வாய்ப்பு தருவது என்றும், 1 ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது என்றும், முடிவு செய்யப்பட்டது.
அதிமுக அரசை கடுமையாக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த பாமக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது, எதிர் முகாமில் பெரும் விமர்சனங்களை ஈட்டித் தந்துள்ளது.

விஷ்ணு பிரசாத் கோபம்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவரான எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆகும். அவரும், இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆயத்த கூட்டம் திருச்சியில் நேற்று, நடைபெற்றது. அதில்தான், விஷ்ணு பிரசாத் விளாசி தள்ளிவிட்டார்.

தகுதி இல்லை என்றார்கள்
விஷ்ணு பிரசாத் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தை ஆள்வதற்கு அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாமக தலைவர்கள் கூறியதை ஒரு வாரத்திற்கு முன்புதான் பத்திரிக்கையில் பார்த்தோம். ஆனால், இன்று அதிமுக உடன் கூட்டணி ஒப்பந்தம் போடுகிறார்கள், கையெழுத்து போடுகிறார்கள், கூட்டணி ஏற்படுத்துகிறார்கள் என்று சொன்னால் இதன் மர்மம் என்ன?

கூட்டணி பேரம்
குரு ஆத்மா உங்களை மன்னிக்காது. உங்கள் சமுதாயத்தை கொண்டு சென்று அடமானம் வைத்து விட்டீர்களே. பாமக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை, கூட்டணி பேரம் நடந்துள்ளது, என்பதை நிச்சயமாக கூற முடியும்.

தொடர் கோபம்
வரும் லோக்சபா தேர்தலில் பாமக பூஜ்யம்தான் வாங்கப்போகிறது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு விஷ்ணு பிரசாத் பேசினார். பாமக கூட்டணி குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளால் வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications