பா ரஞ்சித் சிரிச்சது ஒரு குற்றமா.. ரஜினி கூட வேலை செய்ததாலேயே அடங்கிப்போக வேண்டுமா? கடும் எதிர்வினை
சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் பேட்டி ஒன்றில் சிரித்தது ரஜினி ரசிகர்களை காயப்படுத்தி உள்ளது. ரஜினியால் வளர்ந்த ரஞ்சித் இப்படி செய்திருக்கக்கூடாத என்று ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..அதேநேரம் ரஞ்சித்திற்கு ஆதரவும் எதிர்வினையும் அதிகரித்து வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
பிரபல இயக்குனர் ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார். அடுத்ததாக காலா படத்தையும் இயக்கினார். இரண்டுமே தலித் அரசியல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை மையமாக கொண்ட படங்கள் ஆகும். இந்நிலையில் ரஞ்சித் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி உள்ளார்.

ரஞ்சித் அண்மையில் தலித் சினிமா உருவான வரலாறு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அரசியல் தொடர்பாக நடந்த விவாதத்தில் பா.ரஞ்சித்திடம் எதிர் தரப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பிஜூ பேசுகையில், "நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லீட்டீங்க. அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல", கூட்டத்தில் இருந்தவர்கள் திடீரென கைத்தட்டி சிரித்தார்கள். ரஞ்சித்தும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிறிது நேரம் சிரித்தார். அவரது இந்த செயல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பா ரஞ்சித்திற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். ரஞ்சித் நன்றி மறந்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்..
குறிப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வந்தது முழு பேட்டியல்ல.... சிரித்த பிறகு பதில் என்ன சொன்னார் என்று யாருக்குமே தெரியாது. இந்நிலையில் ரஞ்சித் சிரித்ததை விமர்சித்துள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு நன்றியுடன் ரஞ்சித் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ரஜினிக்கு புரியாம அந்த படங்களை செய்தாரா என்ற கேள்விக்கு ஒரு சிரிப்பு சிரித்தாரே ரஞ்சித் "சோலி முடிஞ்சது" மொமெண்ட்ஸ். ஆனால் ரஞ்சித் உங்களுக்கு புகழ் தேடி தந்த ரஜினிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. அவர் முதுகில் குத்திய நபர்களில் இந்த சிரிப்பு நிரைந்த நீயும்…” என்று கூறினார். தோல்வி படம் குடுத்த ரஞ்சித்த சொகுசு காரில் போக வைத்தவர் ரஜினி.. நன்றி மறந்த ரஞ்சித் இன்னொரு ரசிகர் ட்வீட் போட்டுள்ளார். அதேநேரம் பல ரசிகர்கள், ரஜினிக்கு எல்லா அரசியலும் நன்றாகவே தெரியும் என்று அழுத்தமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ரஜினி ரசிகரோ, தலைவா இந்த ரஞ்சித், மாரி எல்லாம் தலித் அரசியலை உங்களை வச்சு பேச வச்சுட்டு, கடைசில உங்கள கண்டிப்பா முதுகு குத்துவாங்க. மக்கள் & ரசிகர்கள் எதிர்பாக்குற ஜனரஞ்சகமான படமாவே பண்ணிடுங்க. யாரையும் நம்பாதீங்க என்று கூறியுள்ளார். இப்படி ட்விட்டர் முழுக்க ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்தை விமர்சித்து வரும் நிலையில், ரஞ்சித்திற்கு ஆதரவாகவும் எதிர்வினைகள் வந்துள்ளது.
நண்பன் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்..அந்த பதவினை அப்படியே பார்ப்போம்.
“ரஞ்சித் ரஜினியை எதிர்த்து தரக்குறைவாக பேசவில்லை, விமர்சிக்கவில்லை, முறைக்கவில்லை... ஒரே ஒரு சிரிப்பு ! ரஞ்சித் சிரித்தது பலருக்கு ஆத்திரத்தை கொடுக்கிறது என்றால் அவர் தொடர்ந்து சிரிக்க வேண்டும். ரஜினி கூட வேலை செய்ததாலேயே எல்லாரும் அடங்கிப்போக வேண்டும் என்று நினைப்பது அறியாமை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இது ஜனநாயக நாடு !
🔹கபாலி நடிச்ச பிறகு தான் ஆன்மீக அரசியல் பேசினார் ரஜினி
🔹கபாலி நடிச்ச பிறகு தான் சாதி அறிவை தீர்மானிக்கும் என்றார் ரஜினி
🔹கபாலி நடிச்ச பிறகு தான் உத்தரபிரதேசத்தில் புல்டோஸரால் வீடுகளை இடிக்கும் யோகி காலில் விழுந்தார்
🔹கபாலி நடிச்ச பிறகு தான் சங்கராச்சாரியர்களே போகாத ராமர் கோவில் விழாவிற்கு போய் வந்தார்
🔹 கபாலி நடிச்ச பிறகு தான் சிஏஏக்கு ஆதரவு தெரிவிச்சார்.
🔹 கபாலி நடிச்ச பிறகு தான் சமூக விரோதிகள் வசனம் பேசினார் ரஜினி
இன்னும் சில... இதை எல்லாம் பார்த்த பிறகு ரஜினிக்கு சமூக மற்றும் தலித் அரசியல் தெரிந்தாலும் அதை விட்டு விலகி இருப்பதால் வந்த சிரிப்பு அது.
நிச்சயமாக நடிப்பது மட்டுமே நடிகரின் கடமை. அவர்கள் உடனே மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. நடிப்பிற்கும் தனிப்பட்ட எண்ணத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்ததால் வந்த சிரிப்பு அது. 50 ஆண்டுகால சினிமா வாழ்வில் ரஜினி உங்களை கலையின் மூலம் மகிழ்வித்திருப்பார். நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வரேன்னு சொல்லி, அத நம்பி நல்லதிட்டம்னு பணத்தை நிம்மதியை இழந்த ரசிகர்கள் கதை தனி.
ஆனால் ரஞ்சித்தின் 12 ஆண்டுகால கலை பல லட்சம் தலித் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை, முற்போக்கு சிந்தனையை விதைத்திருக்கிறது. தலித்துகள் மீது ஏவப்பட்ட தாழ்வுமனப்பான்மை என்னும் உளவியல் தாக்குதலை தவிடுபொடியாக்கினார். நீலம் பண்பாட்டு மய்யம், நீலம் தயாரிப்பு நிறுவனம், நீலம் பதிப்பகம், வானம் கலை திருவிழா, கூகை திரைப்பட இயக்கம், The Casteless Collective, மார்கழியில் மக்களிசை என பண்பாட்டு தளங்களில் தன் வேர்களை பரப்புகிறார்.
அவர் படத்தில் வரும் வருமானத்தை கொண்டு பெங்களுருவில் சொத்து வாங்கவில்லை, அமெரிக்கா சென்று சூதாடவில்லை. அவரின் சொந்த பணத்தை போட்டு சமூகப் பணி ஆற்றுகிறார். ரஞ்சித்திற்கு 42 வயது. 42 வயதில் சமூகத்திற்கு இவ்வளவு செய்தும் சாதிய வன்மத்தை கக்குகிறார்களே என்று நினைத்ததால் வந்த சிரிப்பு அது !
கடைசியாக எப்பொழுது ரஜினி புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தார்? ரஜினி ரஞ்சித்திற்கு வாழ்க்கை தரவில்லை.
கோச்சடையான் லிங்கா என படங்கள் ஓடாத ரஜினிக்கு அட்டகத்தி, மெட்ராஸ் என்று வெற்றி படம் கொடுத்து இயக்குனர் ரஞ்சித் தன்னை நிரூபித்து பெற்ற வாய்ப்பு அது. அதோடு காபலிக்கு விகடன் விருது ரஜினி பெற காரணமாக இருந்தார் ரஞ்சித். இதை உணர்ந்ததால் வந்த சிரிப்பு அது !
காபலிக்கு பிறகு பல சந்தர்ப்பங்களில் கொள்கை வேறுபாடு இருந்தாலும் ரஜினி குறித்து நல்ல விதமாகவே பேசியிருக்கிறார் ஆனால் பிரச்சனை அவர் தலித் ! தலித்துகள் ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபிக்க வேண்டும் இல்லையென்றால் வசை என்ற சாதியவாதிகளின் திட்டத்தை நினைத்து வந்த சிரிப்பு அது !
ஸ்பேஸில் ரஞ்சித்தை அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதை கேட்டேன். தேக்கி வைத்த சாதிய வன்மம் வெடித்திருப்பது ஆச்சர்யம் இல்லை.வன்மம் போக ஒரு மருந்து இருக்கிறது. அது சகிப்புத்தன்மையோடு சிரிப்பது. அது ரஞ்சித்திடம் இருக்கிறது பெற்றுக்கொள்ளுங்கள். அருவாள் கத்தி துப்பாக்கி அணுகுண்டை விட உங்க சிரிப்பு மிக பெரிய ஆயுதமாக மாறிவிட்டது ரஞ்சித். சீர்கெட்ட சமூகத்தை நினைத்து நிறைய சிரியுங்கள்” இவ்வாறு அந்த நெட்டிசன் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications