முன்னேறிய வகுப்புக்கு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. அண்ணா பல்கலை பதில்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை அதன் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில்,எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பத்திருந்த சித்ரா உள்ளிட்ட மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர்
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும்,படிப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்பதாலும் இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மூன்று இடங்களை ஒதுக்கி இருந்தது.
இதை எதிர்த்து,நீதிபதி புகழேந்தி முன்பு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகத்தில், தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்ற படுவதாக முறையிட்டார்..
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அந்த சான்றிதழ் வழங்கப்படுவதாக தெரிவித்தார்..
தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைகழகம் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற நீதிமன்றம் அனுமதித்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்பட்டது என கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே பின்பற்றாமல், தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, அண்ணா பல்கலைகழகம் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைவந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்றும், எந்த ஒரு மாணவர் சேர்க்கை நடத்தவில்லை என்றும் விளக்கமளித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கடந்த முறை பின்பற்றப்ட்ட இட ஒதுக்கீட்டின்படியே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications