மத்திய அரசை எதிர்க்க ரெடி.. அதிரடியாக சொன்ன அதிமுக ஜெயக்குமார்.. ஆனால் ஒரு கண்டிஷன்!
சென்னை: மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை தான் கடைப்பிடிக்கிறோம் என்றும் மாநில உரிமைகளில் தலையிட்டால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக கட்சி பொன்விழா முடிந்து இன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியினர் கொண்டாடினர்.
இதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜெயக்குமார் கூறியதாவது:-

துணை தலைவர் பதவி
எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பல முறை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை சபாநாயகர் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். அ.தி.மு.க.வில் 62 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். ஓபிஎஸ் பக்கம் 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். எனவே எங்களுக்குதான் எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார்.

நான் சொல்ல முடியாது
இதற்கு ஜனநாயக மாண்புடைய சபாநாயகராகவும்.. விதியை மதிக்கின்ற சபாநாயகராகவும் இருக்கும் பட்சத்தில், அந்த கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டியதுதான் ஒரு சபாநாயகருடைய கடமையாக இருக்க முடியும். இதைத்தான் சபாநாயகர் செய்ய வேண்டும். ஆனால், சபாநாயகர் எப்படி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அ.தி.மு.க. சட்டமன்ற குழு முடிவு செய்யும். இதை நான் சொல்ல முடியாது.

நல்ல சபாநாயகருக்கு அழகு..
ஏற்கனவே கடிதங்கள் கொடுத்து இருக்கிறோம். நானும் பேரவைத்தலைவராக இருந்து இருக்கிறேன். பேரவைத் தலைவருக்கு விதி இருக்கிறது. மரபு இருக்கிறது. மாண்புகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் கடைப்பிடிப்பதுதான் ஒரு நல்ல சபாநாயகருக்கு அழகு. சட்டமன்றத்தில் நாளை சொல்வதாக சபாநாயகர் சொல்லியிருக்கிறார். சபாநாயகர் சொல்வதை பொறுத்து சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து சட்டமன்ற கட்சி முடிவும்.

மத்திய அமைச்சர்களால் நல்லது நடந்தால் சரி
ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் மட்டுமே உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இன்று அதிமுக உள்ளது. ஊடகங்கள்தான் ஓபிஎஸ் தரப்பு - ஈபிஎஸ் தரப்பு என்று போடுகின்றன. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம். மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக நிச்சயமாக எதிர்க்கும். மத்திய அமைச்சர்கள் 100 பேர் கூட வரட்டும். மத்திய அமைச்சர்களால் நல்லது நடந்தால் சரி. ஆனால், உரிமைகளில் தலையிட்டால் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம்'' என்றார்.

4 பேருக்காகத்தான் இதை சொல்கிறார்
அப்போது ஜெயக்குமாரிடம் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ''ஓ பன்னீர்செல்வம் தன்னுடன் இருக்கும் 4 பேருக்காகத்தான் இதை சொல்கிறார்'' என்றார். மேலும், தமிழகத்தில் அடுத்து சட்டமன்ற தேர்தல் வரும் போது மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications