தமிழ்நாட்டின் உரிமையை, விவசாயிகள் நலனை பாதுகாப்போம்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: தமிழ்நாட்டின் காவிரி உரிமையையும், உழவர்களின் நலனையும் நிச்சயம் பாதுகாப்போம் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது காவிரி வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் கர்நாடகாவின் அத்துமீறல் குறித்தும் அதனால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக உரையாற்றினார்.

ஓரணியில் நிற்க வேண்டும்
தீர்மானத்தை வாசித்த துரைமுருகன் காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணையை எதிர்ப்பதில் தமிழ்நாடு கட்சிகள் அனைவரும் அவைக்கு உள்ளேயும் வெளியிலும் ஓரணியில் நிற்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மேகதாது தொடர்பாக அரசின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து அவரே முன்னுரையாக, வரலாற்றில் பதிவாகி இருக்கூடிய தகவல்களை எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி ஒருமனதாக அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முன்மொழிந்திருக்கிறார்.

மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்க மாட்டோம்
அந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய கட்சிகளுக்கும் ஓரணியில் நின்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றி ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவதற்கு நிச்சயம் இந்த அரசு அனுமதி தராது. எந்த காரணத்தை கொண்டு நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு தெரியும்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்
நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்திருக்கக்கூடிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கக்கூடிய இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு நிச்சயம் எடுக்கும். அதில் எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம்.
Recommended Video

விவசாயிகள் நலனை காப்போம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை எல்லா வடிவிலும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றிபெறுவோம்." என்றார்.












Click it and Unblock the Notifications