தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் பிச்சு எடுக்கும் மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது .
தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 4 நாட்களுக்கு இதனால் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்
தமிழ்நாட்டில் ஏற்கனவே 4 தென்மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் தீவிர கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரமாக தீவிரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.

டெல்டா
இன்னொரு பக்கம் நேற்று மாலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. டெல்டாவில் திருவாரூர், தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது.

கனமழை
சென்னையில் சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அசோக்நகர், கே கே நகர், ஆதம்பாக்கம்,
ராயப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வடபழனி ஆகிய பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று மாலை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள்
இன்னொரு பக்கம் கடலோர மாவட்டங்களிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications