4 சீனியர்கள்.. விட கூடாது! "பொதுச்செயலாளர்" எடப்பாடிக்கு வந்த 3 அமில சோதனை.. முட்டி மோதும் தலைகள்!
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு 3 முக்கியமான சவால்கள் ஏற்பட்டுள்ளன. பொதுச்செயலாளர் ஆன பின் அவர் எடுக்கும் போகும் சில முடிவுகள்தான் அவர் கட்சியை எப்படி வழி நடத்த போகிறார் என்ற கேள்விக்கு விடையாக இருக்க போகிறது.
அதிமுகவில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் பொதுச்செயலாளர் சீட் நிரம்பி உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி இருக்கிறார்.
விடா முயற்சி.. சூழ்ச்சி.. அரசியல்.. சட்ட போராட்டம்.. என்று பல விஷயங்களை கடந்து வந்து எடப்பாடி பழனிசாமி.. விருப்பப்பட்டபடியே பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்.

இடைக்கால பொதுச்செயலாளர்
அவர் இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்றாலும் கூட.. பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது. இதில் கண்டிப்பாக எடப்பாடி போட்டியிடுவார். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டுள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் போட்டியிட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

விதிகள்
இந்த விதிகள் காரணமாக சசி, ஓபிஎஸ் பொதுச்செயலாளர் ஆக முடியாது. அதோடு பெரும்பாலான நிர்வாகிகளுக்கு 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்காது. இதன் காரணமாக பொதுச்செயலாளர் பதவியில் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு 3 முக்கியமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.

3 பதவிகள்
3 பதவிகளுக்கு அவர் யாரை நிர்வாகிகளாக நியமிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி காலியாகி உள்ளது. இது போக எடப்பாடி வகித்த தலைமை கழக நிர்வாகி பதவியும் மாற்றப்பட வேண்டும். மொத்தத்தில் 3 பதவிகள் காலியாகின்றன. ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அதில் சிக்கல் இல்லை.

போட்டி
இதனால் மீதம் உள்ள 3 பதவிகளுக்கு போட்டி நிலவுகிறது. இதில் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வருகின்றனர்.
எஸ்பி வேலுமணி - எதிர்க்கட்சி துணை தலைவர்
கேபி முனுசாமி - துணை பொதுச்செயலாளர்
ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் - தலைமை கழக செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி முடிவு
இதில் எஸ்பி வேலுமணி - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆகும் பட்சத்தில் கொறடா பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டி வரும். இந்த பதவி போட்டிதான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் அமில சோதனையாக வந்துள்ளது. ஜாதி ரீதியாக பல நிர்வாகிகள் இந்த பதவிகளுக்கு காய் நகர்த்தி வருகிறார்கள். ஒரு பொதுச்செயலாளராக யாருக்கு எடப்பாடி முன்னுரிமை கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜாதி ரீதியாக பல நிர்வாகிகள் காய் நகர்த்தி வருவதால் முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் என்று மூன்று பிரிவுகளுக்கு 3 பதவிகளை பிரித்து கொடுப்பாரா.. அல்லது மற்ற பிரிவினருக்கும் எடப்பாடி வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications