"5 கலக்கல் திட்டங்கள்.." மழை காலத்தில் இனி சென்னையில் ஒரு துளி நீர் கூட தேங்காது! மாஸ்டர் பிளான்
மழைநீர் தேங்குவதைத் தடுக்க சென்னையில் 5 முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தலைநகர் சென்னையில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்குவது எப்போதும் முக்கிய பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து சென்னை ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலம் தொடங்கினாலே, சென்னைவாசிகளுக்கு ஒரு வித பயம் ஏற்பட்டுவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால், சென்னை சாலைகள் சிறிய மழைக்கே குளங்களைப் போலக் காட்சியளிக்கத் தொடங்கும்.
கடந்த பல ஆண்டுகளாகவே சென்னையில் இதே நிலை தான் தொடர்ந்தது. 2015 சென்னை பெருவெள்ளம் தொடங்கி அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் பாதிப்புகளில் நிலைமை எந்தளவுக்கு மோசமானது என்று தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.

தலைநகர் சென்னை
சிறு மழைக்கே குண்டும் குழியுமாக இருந்த சாலைகளால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னைவாசிகளுக்கு மழைக் காலம் என்றால் ஒரு அலர்ஜியாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையால் தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். இந்த காலத்தைப் பெரியளவில் சிக்கல் இல்லாமல் கடக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் விருப்பமாக இருக்கும்.

மழை நீர் தேங்கும்
தேர்தல் காலத்திலும் இது எதிரொலித்தது. குறிப்பாக திமுக தனது பிரசாரத்தின் போதே, மழைநீர் வடிகால் வாரிய பிரச்சினையைச் சரி செய்வோம் என கூறியது. அதன்படி கடந்தாண்டு தொடக்கம் முதலே சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றது. இருப்பினும், கடந்தாண்டு பருவமழை தொடங்கும் முன்பு, இந்த பணிகள் நிறைவடையவில்லை. இதனால் கடந்தாண்டும் பருவமழை காலத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மழை நீர் தேங்கவே செய்தது.

கருத்தரங்கு கூட்டம்
அப்போதே வரும் ஆண்டுகளில் இந்தளவுக்குக் கூட மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. இதற்கிடையே சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில், நகர்ப்புற வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்த பயிலரங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களின் ஆணையர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் கலந்து கொண்டனர். பருவமழை காலத்தில் முக்கிய நகரங்களில் நீர் தேங்குவது பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

5 முக்கிய திட்டங்கள்
ஒவ்வொரு நகரங்களிலும் வெள்ள பாதிப்பைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இதில் விளக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசுகையில், "வரும் காலங்களில் சென்னை நகராட்சியில் எந்தவொரு இடத்திலும் வெள்ள பாதிப்பால் நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காகச் சென்னை மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட ஐந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

மழைநீர் வடிகால் அமைப்புகள்
முதலில், இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மழைநீர் வடிகால்களில்.. ஒரு மணி நேரத்திற்கு 40 மிமீ அளவுக்கு மட்டுமே மழை நீர் செல்லும் வகையில் இருந்தது. இப்போது அது சீர்படுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 70 மிமீ வரையிலான மழைநீர் செல்லும் வகையில் வடிகால்களை அமைத்துள்ளோம். அடுத்த திட்டமாக நகராட்சியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அந்த பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நிலத்தடி நீர்
முன்பெல்லாம், மழைக் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளைத் தொடங்குவார்கள். ஆனால், கடந்தாண்டு இந்த பணிகளை நாங்கள் 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கினோம். நான்காவதாக, சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் பரிந்துரை அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஐந்தாவது திட்டமாக மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்க மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பு சென்னையில் மேலும் குறையும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications