'காலை சிற்றுண்டியில் சிறுதானியங்கள்!' - மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?
சென்னை: தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம், ஆக்கப்பூர்வமான திட்டமாக மாறியுள்ளது. 'அந்தந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் சிறுதானியங்களை காலை உணவுக்காக கொள்முதல் செய்ய வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளதை, இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
2023 ஆம் ஆண்டை, 'சர்வதேச சிறுதானிய ஆண்டு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதனை ஏற்று காலை உணவுத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு மாற்றத்தைச் செய்துள்ளது.
'காலை சிற்றுண்டித் திட்டம்' தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ''பொதுமக்களிடையே அரிசி உணவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சாமை, கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. இதனை சாகுபடி செய்வதற்கான பரப்பளவும் குறைந்துவிட்டது. மானாவாரி நிலங்களில் சிறுதானியங்களைச் சாகுபடி செய்தால் நல்ல மகசூலைப் பெற முடியும்'' என்றார். மேலும், ''உற்பத்தி செய்த தானியங்களைச் சந்தைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. இவற்றுக்கான சந்தை வர்த்தகமும் குறைவாகவே உள்ளது. எனவே, காலை உணவுத் திட்டத்துக்காக விவசாயிகளிடம் சிறுதானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்'' என்றார்.

என்ன நன்மைகள்
அரசின் இந்த முடிவு, இயற்கை விவசாயிகளிடம் மட்டுமன்றி, உணவுப் பிரியர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் குறித்து எழுத்தாளர் போப்பிடம் பேசினோம். சிறுதானிய உணவுகளின் நன்மை குறித்து பல்வேறு பத்திரிகைகளில் இவர் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் எழுதிய உணவுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் ஏராளமான வாசகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. "அரசின் இந்த முடிவு சரியானது. ஐநா சபையின் அறிவிப்பை அடுத்து இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. சிறு தானியங்களைப் பயன்படுத்துவது உடல்நலனில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும். இந்தத் திட்டத்தை இரண்டு வகைகளில் வரவேற்கிறேன். ஒன்று, சிறுதானியங்களை உற்பத்தி செய்வது என்பது வெகுவாக குறைந்துவருகிறது. காரணம், அதற்கான வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருவதுதான். அரசின் இந்த அறிவிப்பு சாகுபடியைப் பெருக்கவும் மீட்கவும் உதவியாக இருக்கும். இரண்டாவது, சிறுதானியம் என்பது அதிக உரங்கள் போட்டு உற்பத்தி செய்யும் பயிர் வகைகள் இல்லை. அதில் இயற்கையாகவே ஆரோக்கிய கூறுகள் அதிகம். அதனைக் குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முன்வந்திருப்பது சிறப்பான முடிவு. இவ்விரு காரணங்களுக்காகவே வரவேற்கிறேன்" என்கிறார் போப்.

சிறுதானியங்கள் நல்லது
''பொதுவாகக் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கப்படும் இட்லி, தோசை ஆகிய உணவுகள் சற்று மந்தத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். காலை உணவாக அரிசி உணவுகளைக் கொடுப்பதால் மாணவர்கள் சேர்ந்து போய்விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு சோர்ந்து போகும்போது வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்க முடியாது. ஆனால், சிறுதானிய உணவுகள் அப்படி அல்ல. வெப்பம் தரக்கூடிய உணவாக இருப்பதால் செரிமானம் ஆவதில் சிக்கல் இருக்காது. வகுப்பறையில் தூக்கமும் வராது. மேலும், குழந்தைகளின் உடல்நலனுக்கு புளிப்புத்தன்மையற்ற சிறுதானியங்கள் மிக நல்லது'' என்கிறார், எழுத்தாளர் போப்.

வைட்டமின்கள் அதிகம்
தொடர்ந்து பேசுகையில், ''அரிசியை உற்பத்தி செய்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அதிக நீரை உறிஞ்சிக் கொண்டு வளர்வதால் அதில் புளிப்புத் தன்மை இருப்பது இயல்பு. சிறுதானியங்களை உரமே போடாமல் விளைவிக்க முடியும். அதற்கு அதிக நீரும் தேவைப்படுவதில்லை. பயிர் முளைப்பதற்கும் பயிர் வேர்ப்பிடித்து வளரவும் மட்டுமே தண்ணீர் தேவைப்படும். இதனால் மண்ணின் சத்தை எடுத்துக் கொண்டு பயிர் வளரும். சிறுதானியம் பாரம்பரியமானது மட்டுமல்ல; நிறைய சத்து நிறைந்தது. அறிவியல்ரீதியாக அதிக வெப்பத்தையும் அதிக தாதுகளையும் எடுத்துக் கொண்டு சிறுதானியங்கள் வளரும். இதில் வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளன'' என்கிறார்.

முதலில் கொஞ்சம் மாறுபாடு இருக்கும்
''சிறுதானிய உணவுகளால் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?'' என்றோம். "சாமை, திணை, குதிரைவாலி ஆகியவை மிகமிக நல்லது. இதனை முதன்முதலாக சாப்பிடும்போது உடல் ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை இருக்கலாம். லேசாக வயிறு வலிக்கலாம். மூன்றுநாள் வரை தொடர்ந்து உட்கொள்ளும்போது அதனை முழுமையாக உடல் ஏற்றுக் கொள்ளும். பெரும்பாலும் கஞ்சியாகவும் பொங்கலாகவும் செய்து தருவது சரியானது. களியாகவும் கிண்டலாம்; கூழாகவும் காய்ச்சலாம். ஆனால், மாவாக மாற்றும்போது தானியத்தின் வீரியம் குறைந்துவிடும். எனவே, தானியத்தை முழுமையாக உடைக்காத கஞ்சியாக அல்லது பொங்கலாக கொடுக்கலாம்'' என்கிறார்.

வசதி படைத்தவர்கள் மட்டுமா சாப்பிட வேண்டும்
இதனையடுத்து, இயற்கை ஆர்வலர் கலாநிதி பவேஸ்வரனிடம் பேசினோம். ''அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஊட்டச்சத்து மற்றும் உணவு இயல் சார்ந்து மட்டும் இதனைச் சொல்லவில்லை. சிறுதானியம் என்பது ஏதோ வசதிபடைத்தவர்களின் உணவாகவே பார்க்கப்படுகிறது. அதன் விலையும் கொஞ்சம் கூடுதல் என்பதால் அவர்கள்தான் வாங்கும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். இப்படியொரு கருத்தை, அரசின் இந்த உத்தரவு உடைக்கும் என நம்புகிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு சிறுதானிய உணவுகளைக் கொண்டு போய் சேர்ப்பது என்பது எளிதான பணி அல்ல. அதற்கான நிதியும் அதிகம் தேவைப்படும். இருப்பினும், அதனை சாத்தியமாக்குவதற்கு அரசு முன்வந்துள்ளது. அந்த வகையில் இதனை வரவேற்கிறேன்'' என்கிறார்.

தமிழக அரசுக்கு சபாஷ்
''மாநில அரசு கொள்முதல் செய்யும் அளவுக்கு சிறுதானியங்களின் உற்பத்தி இருக்கிறதா.. பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். "இப்படியொரு பார்வை பொதுவாக முன்வைக்கப்படுகிறது. அதில் சிறிதளவும் உண்மையில்லை. இங்கு உற்பத்திக்கு ஏற்ற சந்தை இல்லை என்பதுதான் உண்மை. பாரம்பரிய அரிசிகளில்கூட சில வகையான அரிசிகள் மட்டும்தான் விரைவாக விற்பனை ஆகிறது. வேறு சில வகைகள் விற்பனையாவதில் தேக்கமே நிலவுகிறது. காலை சிற்றுண்டியில்தான் சிறுதானியங்களை அரசு சேர்த்துள்ளது. எனவே, அதிகமான தேவை எழுவதற்கு வாய்ப்புகள் இல்லை. காலை உணவுக்குத் தேவையானவற்றைவிடவும் அதிகமாக கொள்முதல் செய்ய முடியும்'' என்கிறார்.












Click it and Unblock the Notifications