ஆறே மாதம்.. அடுக்கடுக்காக சர்ச்சைகள்.. பஸ் கடத்தல் முதல் ஆடியோ பஞ்சாயத்து வரை! சூர்யாவின் சேட்டைகள்!
சென்னை : திமுகவில் இருந்து விலகி கடந்த மே மாதம் பாஜகவில் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா, பாஜக உடனான தனது உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்த இந்த 6 மாத காலத்தில் சூர்யா சிவா ஏகப்பட்ட பஞ்சாயத்துகளில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருச்சி சூர்யாவை பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார்.
இந்நிலையில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் எனக் கூறிவிட்டு, பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

சூர்யா சிவா
திமுக மாநிலங்களவை குழு தலைவரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா. தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, தனியாக மனைவியுடன் வசித்து வந்த சூர்யா சிவா, சில மாதங்களுக்கு முன்பு திமுகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். இதனால், அண்ணாமலையின் கண்ணில் பட்ட அவர், கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பாஜகவில் சேர்ந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் சூர்யா.

உறவை முறித்துக் கொள்கிறேன்
இந்நிலையில், திருச்சி சூர்யா, பாஜக உடனான தனது உறவை முடித்துகொள்வதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி எனப் பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா. சூர்யா, பாஜகவில் இருந்த இந்த 6 மாதங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

பஸ் கடத்தல்
சூர்யா, சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து சூர்யா சிவாவின் கார் மீது மோதியது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சேதமடைந்த காரை சீரமைத்துத் தருவதற்கான தொகையை பங்கிட்டுக் கொள்வதாக தனியார் பேருந்து நிறுவனத்தினர் சூர்யா சிவாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து சூர்யா சிவா தனது காரை பழுதுநீக்க கொடுத்துள்ளார். அதன்பின், காரை சீரமைப்பதற்கான செலவுத் தொகையை கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிரடியாக ஒரு செயலில் இறங்கினார் சூர்யா.

வீட்டு முன் பஸ் - கைது
சூர்யா சிவா தனது ஆதரவாளர்களுடன் சென்று, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த நிறுவனத்தின் மற்றொரு பேருந்தை எடுத்துச் சென்று தனது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைத்தார். இதுகுறித்து அந்த நிறுவனத்தினர், தங்களது பேருந்தை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சூர்யா சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பள்ளிக்கூட விவகாரம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்த்தி என்பவர் ஏபிசி மாண்டேசரி பள்ளியை நடத்தி வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யாவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தம் முடிந்த பிறகு பள்ளியையும் வீட்டையும் காலி செய்து கொடுக்கச் சொல்லியும் அவர்கள் காலி செய்யாமல் இழுத்தடித்தனர்.

கொலை மிரட்டல்
அத்தினா சூர்யா சிவாவின் மனைவி என்ற நிலையில், தனது கணவர் சூர்யா பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் பொறுப்பு வகிப்பதை காரணம் காட்டியும், சூர்யாவின் மூலமாகவும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறி வருவதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அத்தினா சூர்யா சிவா தம்பதியினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்த்தி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

டெய்சி ஆடியோ
பாஜகவில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஒரு ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில் திருச்சி சிவா மற்றும் டெய்சி சரண் என இருவரும் மாறி, மாறி சண்டை போட்டுக்கொள்கின்றனர். மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டி இருந்தார். மேலும் பாஜகவில் நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பதவி வாங்கினீர்கள் என தெரியும் என மோசமான வார்த்தைகளால் பாஜக மூத்த நிர்வாகி பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

கொலை மிரட்டல்
மேலும், டெய்சி சரணுக்கு கடுமையான வார்த்தைகளால் கொலை மிரட்டலும் விடுத்தார் சூர்யா சிவா. லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய். அநாதையாக சாலையில் கிடப்பாய் எனவும் பேசியிருந்தார். உனது சாவுக்கு நான் தான் பொறுப்பு என மிரட்டல் விடுத்தார். மேலும் நீ யாரிடம் வேண்டும் என்றாலும் செல் அண்ணாமலையிடம் சொல், அமித் ஷா, மோடியிடம் சொல் என தலைவர்களையும் சீண்டினார். சென்னையில் மருத்துவமனை நடத்த முடியாது, நீ வாழ முடியாத நிலையை உருவாக்குவேன் என எச்சரித்தார்.

அக்கா - தம்பி
இந்த ஆடியோ பாஜகவிற்குள் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இருவரிடமும் பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய திருச்சி சூர்யா, "ஒருவருக்கொருவர் பேசி, இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என முடிவு செய்தோம். அக்காவின் தரப்பிலிருந்து இந்த ஆடியோ போகவில்லை. நானும் வெளியில் கொடுக்கவில்லை. இது வேறு வகையில் வெளியில் சென்றிருக்கிறது. திரும்பவும் பழையபடி அக்கா தம்பியாக தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.

சஸ்பெண்ட் - விலகல்
இதையடுத்து, சூர்யா, 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் அவர்மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா இன்று அறிவித்துள்ளார். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் எனவும் சூர்யா தனது விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். போகும் நேரத்திலும் கேசவ விநாயகத்துக்கு எதிராக பெரிய வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டே சென்றிருக்கிறார் திருச்சி சிவா.












Click it and Unblock the Notifications