மோடி வீசிய கணைகள்.. "மைனஸ்".. ஈபிஎஸ், ஓபிஎஸ், திமுக பற்றி மோடியிடம் புட்டுப் புட்டு வைத்த அண்ணாமலை!
சென்னை : காரில் ஒன்றாகப் பயணித்தபோது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும், தமிழக பாஜகவின் நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் மோடி அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியிடம் அண்ணாமலை பேசியது பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன.
காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரிலேயே மதுரை கிளம்பிய பிரதமர் மோடி, நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அழைத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அண்ணாமலை பிரதமர் மோடியின் அருகில் வந்தார். அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு மதுரை கிளம்பினார் மோடி. அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அண்ணாமலையிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் காரில் பயணித்தது பற்றியும், அவர் பல கேள்விகள் கேட்டதாகவும் அண்ணாமலையே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். எனினும், என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது பற்றி பாஜக வட்டாரங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன.

பிரதமருடன் காரில் அண்ணாமலை
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்தி கிராம பல்கலைக்கழத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற 36-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். விழா முடிந்து பிரதமர் மோடி காரிலேயே மதுரைக்கு புறப்பட்டபோது அண்ணாமலையையும் தன்னுடன் காரில் அழைத்துச் சென்றார் பிரதமர் மோடி. தனது சில மணி நேர தமிழக விசிட்டில் அரசியல் பற்றி விவாதிக்க முடியாத சூழலில், திடீரென ஏற்பட்ட பயண மாற்றத்தால், புரோட்டோகாலையும் மீறி அண்ணாமலையை தனது காரிலேயே அழைத்துச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.

மோடி கேள்வி - நெருக்கமான அண்ணாமலை
காரில் முன் சீட்டில் பிரதமர் மோடி அமர்ந்திருக்க, பின்னால், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்துள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென பிரதமரின் கான்வாயில் ஏறியதைப் பார்த்து பாஜகவின் மூத்த நிர்வாகிகளே ஆச்சர்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைக்கும் ஆனந்த அதிர்ச்சியாம். இந்த சுமார் 1 மணி நேர கார் பயணத்தில் பிரதமருடன் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். அண்ணாமலையிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிறையே கேள்விகள் கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

கோவை சம்பவம்
அனைத்து கேள்விகளுக்கும் அண்ணாமலை பட் பட்டென பதில்களை தெறிக்க விட்டிருக்கிறார். கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றியும், அந்த விவகாரத்தில் அண்ணாமலையின் தொடர் நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருந்த பிரதமர் மோடி அந்த விஷயம் பற்றி அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். உடனே அண்ணாமலை, ஆரம்பம் முதலே நாம் சொல்லச் சொல்லத் தான் தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தமிழக அரசின் செயல்படாத தன்மையை அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தோம். இது மக்கள் மத்தியில் நம் மீது கவனத்தை திரும்பச் செய்துள்ளது. கோவை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதுமே நமக்கு ஆதரவு பெருகியுள்ளது எனக் கூறியிருக்கிறார்.

திமுக அரசு எப்படி?
மேலும், திமுக அரசின் குறைகளை எப்படி மக்கள் முன்பு ப்ரொஜெக்ட் செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, திமுக அரசு முக்கியமான வாக்குறுதிகள் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை தொடர்ச்சியாக விமர்சித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அமைச்சர்களும் செய்யும் ஊழல் விவரங்களை சேகரித்து வருகிறேன். அதுபற்றியும் தொடர்ந்து நம் கட்சியினர் பேசி வருகின்றனர். மக்கள் மத்தியிலும் நம் குரல் நன்றாகப் போய்ச் செர்ந்துள்ளது, மக்களே அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

பூத் கமிட்டி
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார் மோடி. அதற்கு அண்ணாமலை, மண்டல தலைவர்களை நியமித்து தேர்தல் ஆலோன்சைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பூத் கமிட்டியில் இத்தனை பேர் இருக்க வேண்டும், அதில் இந்த விகிதத்தில் அனைத்து பிரிவினரும் இருக்க வேண்டும் என திட்டமிட்டு பூத் கமிட்டியை வலுப்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கவனமாக கேட்ட மோடி
மேலும், முன்பே திட்டமிட்டப்படி, அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து தமிழகம் வருகிறார்கள். தமிழகத்திலும் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குள் எய்ம்ஸ் உள்ளிட்ட சில திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தினால் இன்னும் நம் பலம் கூடும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, உடனடியாகச் செய்ய வேண்டியவை என்னென்ன என ப்ரியாரிட்டி கொடுத்து செய்துவிடலாம் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி?
தொடர்ந்து, தேர்தல் கூட்டணி பற்றியும், அதிமுக விவகாரம் பற்றியும் அண்ணாமலையிடம் கேட்டுள்ளார் மோடி. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அதே நேரம், அவரது ஆதரவாளர்கள் பாஜக கூட்டணியை பெரிதாக விரும்பாதது போலவே இருக்கிறது என்றும், நமது கூட்டணி கணக்குகளுக்கு அவர்கள் முரண்டு பிடிப்பார்கள் என்றே தெரிகிறது என்றும், அதிமுக கூட்டணி, நமக்கு வோட் கன்வெர்ட் செய்ய அவசியம் என்றும் போட்டு வைத்துள்ளார்.

வோட் கன்வெர்ட்
மேலும், ஓ.பன்னீர்செல்வம் நமக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார் என்றும், தென் மாவட்டங்களில் நமக்கு ஓபிஎஸ் பெரிய அளவில் வோட் கன்வெர்ஷனுக்கு உதவுவார் என்றும் அண்ணாமலை மோடியிடம் புட்டுப்புட்டு வைத்துள்ளார். டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் நம்முடன் இணைந்தால் தென் மாவட்டங்களில் நம்பி இறங்கலாம் என்றும், நாம் திட்டமிட்டிருக்கும் தொகுதிகளில் இந்தக் கணக்குகளை வைத்தே வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார் அண்ணாமலை. தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள் என மோடியிடம் வாழ்த்தும் பெற்றிருக்கிறாராம் அண்ணாமலை.

மக்கள் என்ன கேட்கிறாங்க?
பிரதமர் மோடி உடனான இந்த திடீர் மீட்டிங்கால் அண்ணாமலை மிகவும் மகிழ்ந்திருக்கிறார். இதனை நேற்று பிரஸ்மீட்டிலும் வெளிப்படுத்தினார் அண்ணாமலை. "பிரதமர் திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குச் செல்லும் போது கட்சியின் மாநில தலைவர் என்கிற முறையில் என்னை காரில் அழைத்துச் சென்றார். ஒரு மணி நேரம் பிரதமருடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் நிறைய கேள்வி கேட்டார். பிரதமருக்கு தமிழக மக்களின் மீது எல்லையற்ற அன்பு, பாசம் இருக்கிறது. தமிழக மக்களுக்கு இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் எதைப் போன்ற விஷயங்களை மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டார்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications