சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலையில் ஸ்ரீதேவி.. எமனாக எதிரே சரக்கு வாகனம்.. இரக்கமே இல்லாத டிரைவர்
சென்னை: சென்னை வேப்பரியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் இருக்கிறது. இந்த சாலை மிகவும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதேவி நேற்று காலை தனது ஸ்கூட்டியில் புரசைவாக்கம் சென்று விட்டு, மீண்டும் புதுப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த சரக்கு வாகனம் ஒன்று ஸ்ரீதேவிக்கு எமனமாக மாறியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடங்களில் மிக அதிகமாக உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார் என்று பார்த்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தான். இருசக்கர வாகன ஓட்டிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் போக்குவரத்து விதிமீறல்கள், லாரிகள், கார்கள், வழிகொடுக்காமல் செல்வது அதிகமாக இருப்பதால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் சாலைகள்
பேருந்தை முந்தி செல்ல முயலும், லாரியை முந்தி செல்ல முயலும் போது கவனமாக செல்ல வேண்டும். அதேபோல் சாலைகளில் பள்ளங்கள் இருக்கும் வாய்ப்பு உள்ளதால், ஓரத்தில் செல்வதே நல்லது. ஏனெனில் திடீரென வேகத்தை குறைக்கும் போது, பின்னால் வரும் லாரிகள் பிரேக் பிடிக்காமல் மோதிவிடும்வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே நடந்த சம்பவம் பற்ற பார்ப்போம்.
ஸ்ரீதேவி வாகனம்
சென்னை புதுப்பேட்டை, சேஷகிரி தெருவைச் சேர்ந்த 42 வயதாகும் ஸ்ரீதேவி என்பவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் புரசைவாக்கம் சென்றுவிட்டு, புதுப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் ஸ்ரீதேவி மீது திடீரென மோதியது.
சரக்கு வாகனம்
இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஸ்ரீதேவியின் தலையில் சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. இதில் சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய ஸ்ரீதேவி உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரக்கு வாகன டிரைவர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றுவிட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதேவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ஸ்ரீதேவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை செம்பரம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் சூர்யா (24) தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உறவினர்கள் புகார்
இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், சரியான நேரத்துக்கு வந்து இருந்தால் ஸ்ரீதேவியை காப்பாற்றி இருக்கலாம் என்று கவலை தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேப்பேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications