சினிமாவையே மிஞ்சிய தெலுங்கானா சேஸிங்.. புதுமண தம்பதியை விரட்டி விரட்டி வந்த உறவுகள்! இப்படி நடக்குமா
சென்னை: ஆணவக்கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக்கொலையில் ஈடுபட்டு விடுகிறார்கள்.. மாற்று சாதியினரை காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் அவமானமாக கருதுகின்றனர். இதனாலேயே பெண்களும் சேர்த்து கொலை செய்யப்படுகிறார்கள்.. தமிழ்நாடு உட்பட அண்டை மாநிலங்களிலும் இந்த விவகாரம் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காதல் திருமணத்துக்கு இன்னமும் எதிர்ப்புகள் தமிழகத்தில் நிலவி வருகிறது.. இந்த காதல் விவகாரம் கொலையிலும் சென்று முடிவடைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது..

கோவை பவிப்ரியா காதல்
4 நாட்களுக்கு முன்புகூட கோவை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. பொள்ளாச்சி கொண்டேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பவிப்பிரியா என்ற எம்சிஏ (MCA) பட்டதாரி பெண், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பவிப்பிரியா அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த சேதுபதி என்பவரை 4 வருடங்களாக காதலித்துவந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு சேதுபதியின் குடும்பத்தினர் சம்மதம் சொன்னார்கள். ஆனால் பவிப்ரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் சேதுபதி குடும்பத்தினரின் துணையோடு சேதுபதி - பவிப்பிரியா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைக்கேள்விப்பட்ட பவிப்பிரியா பெற்றோர், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆணவப் படுகொலை
அதாவது, ஆணவப் படுகொலை செய்து விடுவேன் என்று மகளை போனில் மிரட்டினாராம் பவிப்பிரியாவின் அப்பா.. இந்த ஆடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பியிடம் கணவர் சேதுபதியுடன் வந்து பவிப்ரியா புகார் அளித்தார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆணவப் படுகொலை செய்து விடுவதாக மிரட்டிய பவிப்பிரியாவின் அப்பா, அம்மா செல்லம்மாள், தம்பி மணிவாசகம், மாமா முருகானந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தெலுங்கானா ஸ்வேதா
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரு கொடுமை நடந்துள்ளது.. மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ளது நரசம்பள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் ஸ்வேதா என்ற இளம்பெண், பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. இது இவர்களது 8 வருட கால காதலாகும்..
ஒருகட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் ஸ்வேதா வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. பிறகு மகளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு காட்டினார்கள்.. கடைசிவரை தங்களது காதலை ஏற்காமல் எதிர்ப்பை தெரிவித்ததால், அச்சமடைந்த காதலர்கள் இருவரும் 4 மாதங்களுக்கு முன்பே வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அத்துடன் அதே கிராமத்தில் வசிக்கவும் துவங்கினர்.
இதனால் ஸ்வேதா, பிரவீன் இரு வீட்டினரிடமும் பிரச்சனை அதிகமானது... அதிலும் ஸ்வேதா வீட்டில் உச்சக்கட்ட கோபத்தில் இருந்ததால், எப்படியும் தங்களை வாழவிட மாட்டார்கள் என்று நினைத்து, புதுமண தம்பதி இருவரும் செகந்திராபாத்துக்கு குடிபெயர்ந்து விட்டனர்.. அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
தவித்த புதுமண தம்பதி
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. புது ஊரில் குடிபெயர்ந்து, அங்கு யாரையுமே தெரியாத நிலையில், ஸ்வேதாவை கவனித்து கொள்ளவும் முடியாத சூழல் பிரவீனுக்கு ஏற்பட்டது. இதனால் சொந்த ஊரில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கே ஸ்வேதாவை அழைத்து சென்றுவிடலாம் என்று முடிவு செய்தார்..
அதன்படியே ஸ்வேதாவை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தந்தார்.. பிறகு, டிஸ்சார்ஜ் செய்து, தன்னுடைய வீட்டிற்கு ஸ்வேதாவை பிரவீன் அழைத்து வந்தார்.. அதற்குள் இந்த தகவல் ஸ்வேதாவின் குடும்பத்தினருக்கு எட்டியது.. உடனே ஸ்வேதாவின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர், காரில் ஏறி, பிரவீனின் வீட்டிற்குள் சென்று, அங்கிருந்த குடும்பத்தாரை கடுமையாக தாக்கினார்கள்..
ஸ்வேதாவின் கை காலை கட்டி
ஸ்வேதாவின் கை, கால்களை கயிற்றால் கட்டி, தரதரவென வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.. இதைப்பார்த்து பதறிப்போன பிரவீன், 6 பேருடன் போராடி மனைவியை மீட்க முயன்றார்.. ஆனால், பிரவீனையும் உருட்டுக்கட்டையால் தாக்கிய அந்த கும்பல், பிரவீன் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது.. இதனால் பிரவீன் அலறி துடித்தார்.. ஆனால், அந்த கும்பல் ஸ்வேதாவை இழுத்து வந்து காரில் தள்ளி, அங்கிருந்து அவரை கடத்தி சென்றனர்.
இறுதியில் பிரவீன் குடும்பத்தினர் நரசம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்வேதாவை கடத்தி சென்றவர்கள் யார்? என்ற விசாரணையில் இறங்கி உள்ளனர்.. மேலும் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications