நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெல்லுமா?..மோடியா? ‘இந்தியா’வா?.. வெற்றி யாருக்கு?
சென்னை: இன்றுடன் ஏழாவது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறைக்கு நியாயம் கேட்டுப் போராடி வருகின்றன.
ஆகவே, ஒன்றிய அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன. அவையில் பாஜக அரசைக் கவிழ்க்கும் அளவுக்கு எதிர்க்கட்சியினருக்கு பலம் இல்லை. ஆனாலும், தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் என்ன? இந்த அரசியல் அழுத்தம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சி என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். இதுவரை 'இந்தியா' கூட்டணியில் இல்லாத சந்திரசேகர ராவும் இப்போது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்? அது குறித்து இருவரிடம் கருத்துகள் கேட்டோம். அவர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அவசியம் பற்றிப் பல விளக்கங்களை அளித்தார்கள்.
திருச்சி வேலுச்சாமி
"பொதுவாக நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் உருவாக்குவார்கள். அதுதான் கடந்த கால வரலாறு. ஆனால், பாஜக ஆட்சியில் எப்படி என்றால், ஆளும் கட்சியே பிரச்சினையை உருவாக்கும். மற்ற கட்சிகளைப் பேசவிடாமல் கூச்சல் போடுவார்கள். இறுதியில் ஒரே நாளில் எல்லா தீர்மானங்களையும் கேள்வியே இல்லாமல் நிறைவேற்றிவிடுவார்கள். இதுதான் இதுவரை பாஜக ஆட்சியில் இதுதான் நடைமுறை.
ஆனால், இப்போது எதிர்க்கட்சிகள் விழித்துக் கொண்டுவிட்டன. 'இந்தியா' கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. அவை அனைத்தும் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பிரதமர் மோடி அவைக்கு வந்து இது குறித்துப் பேச வேண்டும் என்கிறார்கள். ஆனால், அவர் இதுவரைப் பேசவில்லை.
அமெரிக்காவில் கறுப்பின பிரஜை ஒருவர் கழுத்தில் காவல்துறை தனது பூட்ஸ் கால்களால் அழுத்தியது. அதில் அந்த கறுப்பின நபர் இறந்துபோனார். அதைக் கண்டு ஒட்டுமொத்த அமெரிக்காவே ஆவேசமாகக் களத்தில் குதித்துப் போராடியது.

ஆனால், இந்தியாவில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துவரப்பட்டுள்ளனர். உலகில் உள்ள மனிதக் குலமே வெட்கித் தலைகுனிகின்ற அளவுக்கான சம்பவம் இது. ஆனால், பாஜகவுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தோன்றவில்லை.
இதில் கொடுமை என்னவென்றால், மணிப்பூர் பிரச்சினை கடந்த மே மாதம் 4 ஆம் தேதி நடக்கிறது. அதற்கு அடுத்த நாளே காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இரண்டொரு நாள்களிலேயே தேசிய மகளிர் ஆணையத்திற்குத் தகவல் தரப்படுகிறது. ஆக, மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முழுத் தகவலும் மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுவிடுகிறது.

அதன்பின்பு 7 அல்லது 8 நாடுகளுக்குப் பிரதமர் மோடி செல்கிறார். அப்படிச் சென்ற நாடுகளின் அதிபர்களின் மனைவிகளுக்கு மோடி சேலையை அன்பளிப்பாகக் கொடுக்கிறார். சொந்த நாட்டில் உள்ள பெண்களை நிர்வாணமாக இழுத்துக் கொண்டு போகின்றபோது, இவர் அயல்நாட்டுப் பெண்களுக்குச் சேலை கொடுக்கின்றார்.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகும் இவர் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதியே வழங்கப்படவில்லை. அதன் பிறகு பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் விதிப்படி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்தால், விவாதத்தை அனுமதித்தே தீரவேண்டும்.

ஆகவே புத்திசாலித்தனமாக அதைச் செய்தார்கள். இப்போது அனுமதித்தே தீரவேண்டும். இது மட்டும் இல்லாமல் பாஜகவுக்கு மேலும் ஒரு புதிய அதிர்ச்சியும் கிடைத்திருக்கிறது. தெலுங்கானா சந்திரசேகர ராவும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார். இதே நிலை நீடித்தால், நாளை பாஜகவை ஆதரிக்கும் கட்சிகளும்கூட நாளை எதிர் அணிக்கு வரவேண்டிய நிலைமை உண்டாகும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்றத்தில் பேசுகிறார். அவருடைய மைக் ஆஃப் செய்கிறார்கள். பாஜகவுக்கு ஒன்று புரியவில்லை. விரைவில் இன்னும் 10 மாதங்களில் உங்கள் ஆட்சியையே மக்கள் ஆஃப் செய்யப் போகிறார்கள். அது பாஜகவுக்கு இன்னும் தெரியவில்லை" என்றார்

பத்திரிகையாளர் ஜென் ராம்
"எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அதற்கான நாளை ஒதுக்கி அவர்கள் நிச்சியம் விவாதித்தாகவேண்டும். வாக்கெடுப்பில் யார் வெற்றி பெருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அதன்மூலம் விவாதிக்காமல் இந்த மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வைப்பது, அதன்மூலம் இதுவரை நாடாளுமன்றத்தில் பேசாமல் இருந்த பிரதமரைப் பேச வைப்பதுதான் இதன் நோக்கம்.
இது சட்டத்தின் ஆட்சி. அப்படி என்றால் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? இதுவரை அவர்கள் வன்முறையை ஒடுக்க என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் சொல்லவே இல்லை. இந்த நிலை தொடர்வதால்தான், பிரதமரை நாடாளுமன்றத்திற்கு வரவழைக்கின்றார்கள் எதிர்க்கட்சியினர். அதைத்தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை.

நாடாளுமன்றத்திற்குப் பிரதமர் மோடி வந்தார். சோனியா காந்தியும் மணிப்பூர் குறித்துப் பேசுங்கள் என்று நினைவுபடுத்தினார். அன்றைக்கு உச்சநீதிமன்றமும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்திருந்தது. 'உங்களால் சரி செய்ய முடியவில்லை என்றால் சொல்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி இருந்தது.
அதைச் சமாளிப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் கலவரத்திற்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத, பெண்களுக்கு எதிரான தனிமனித குற்றங்களை இத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். இதற்கு மோடி பேசாமலே இருந்து இருக்கலாம். அவரது இந்தச் செயல் பலரது கோப்பதை அதிகரித்தது.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறாது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான பலம் இல்லை என்பதையும் அறிவார்கள். ஆனால், நாட்டில் நடக்கும் கருத்தியல் யுத்தத்தில், பேசாமல் நழுவி வரும் பிரதமரை அழைத்து வந்து அவரிடம் இருந்து பதிலைப் பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மோடி அரசு எந்த விசயத்தில் தோற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசக் கூடிய வாய்ப்பு எதிர்க்கட்சியினருக்குக் கிடைக்கும். எதிர்ப்பதற்காகத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்றே நான் சொல்வேன்" என்றார்












Click it and Unblock the Notifications