2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன
சென்னை: இந்தியாவில் வாடகை வீட்டில் இருப்போரின் உரிமைகள் மறுக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2026 மாடல் வாடகைச் சட்டம் (MTA) முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இது உரிமையாளர்கள்- வாடகைதாரர்கள் என இரு தரப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்கிறது.
வாடகை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், வாடகைக்கு இருப்போர் மற்றும் உரிமையாளர் இருவரையும் பாதுகாக்கவும், 2026 மாடல் வாடகைச் சட்டம் (MTA) முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. டெபாசிட் உச்சவரம்பு நிர்ணயித்தல் முதல் வாடகைதாரர்களைக் காலி செய்யும் நடைமுறைகளை எளிதாக்குதல் வரை இதில் பல முக்கிய பாயிண்டுகள் இடம் பெற்றுள்ளது.

டெபாசிட் கட்டுப்பாடு
வாடகைக்கு இருப்போரிடம் உரிமையாளர் இஷ்டத்திற்கு டெபாசிட் பெறுவார்கள். சென்னையில் வீட்டிற்கு 6 முதல் 9 மாத வாடகையைக் கூட அட்வான்ஸாக பெறுவார்கள். ஆனால், புதிய விதிகளின் கீழ் அட்வான்ஸ் தொகை இரண்டு மாத வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடை போன்ற வணிகப் பகுதிகளுக்கு மட்டும் அதிகபட்சம் ஆறு மாத வாடகையை டெபாசிட் தொகையாக வாங்கிக் கொள்ளலாம் என்ற உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. மேலும், ஒருவர் வீடு அல்லது கடையை காலி செய்யும்போது, அன்றைய தினமே பிடித்தம் போக முழுத் தொகையையும் உரிமையாளர்கள் உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும்.
வாடகை உயர்த்துவதிலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். அதிலும் 60 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களுக்கு அதிகபட்சம் 10% வரையிலும் பிற பகுதிகளில் சந்தை நிலவரப்படியும் மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு நடுவே வாடகையை உயர்த்த அனுமதி இல்லை.
காலி செய்யும் விதி
அதேபோல இதில் வீட்டின் உரிமையாளர்களுக்குச் சாதகமாகவும் பல முக்கிய பாயிண்டுகள் உள்ளன. இரண்டு மாதங்கள் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருப்பது, சொத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறுவது போன்ற காரணங்களுக்கு காலி செய்ய முடியும். முதலில் வாடகை ஆணையம், பிறகு, வாடகை நீதிமன்றம், இறுதியில் வாடகைத் தீர்ப்பாயம் என முறையீடு செய்யும் வழிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 30 நாட்களில் தீர்வு தரப்பட வேண்டும் என்பதே இதன் இலக்கு.
உரிமையாளர் தானாகச் சென்று, வெளியேற்றும் நடவடிக்கைகளில் நிச்சயம் ஈடுபடக்கூடாது. அதேபோல வாடகை செலுத்தவில்லை என்றாலும் சரி வழக்கு நடந்து கொண்டு இருந்தாலும் சரி குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை நில உரிமையாளர் துண்டிக்க முடியாது. இது வாடகைதாரர்களுக்கு அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பதிவு செய்யப்பட வேண்டும்
வாடகை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் 60 நாட்களுக்குள் மின்னணு முறையில் முத்திரையிடப்பட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் உரிமையாளர்களுக்கும் உரிமை கிடைக்காது. வாடகைக்கு இருப்போருக்குச் சட்ட பாதுகாப்பு கிடைக்காது. தகராறுகள் மற்றும் ஒப்பந்தங்களை ஆன்லைன் போர்ட்டல்கள் கையாளும். ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னும் ஒருவர் தங்கினால் அதற்குக் கூடுதல் வாடகையை உரிமையாளர் வசூலிக்கலாம். முதல் இரண்டு மாதங்களுக்கு இரட்டிப்பு வாடகையும் பின்னர் காலி செய்யும் வரை நான்கு மடங்கு வாடகை செலுத்த வேண்டும்.
யார் பொறுப்பு
அதேபோல வாடகையில் இருப்போர் மற்றும் உரிமையாளரின் பொறுப்புகளை இது மிகத் தெளிவாகப் பிரிக்கிறது. கட்டமைப்பு பழுதுகள், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய மற்றும் பெரிய சீரமைப்புகள் அனைத்தும் உரிமையாளர் பொறுப்பு. அதை அவர்களே செய்ய வேண்டும். மறுபுறம் சிறு மற்றும் அன்றாடப் பராமரிப்புகள் வாடகைதாரர் பொறுப்பாகும்.
2021 மாடல் வாடகைச் சட்டத்தின் அடிப்படையில் உருவான இதில் பல முக்கியமான பாயிண்டுகள் இருக்கிறது. அதேநேரம் இது உடனடியாக அமலுக்கு வரும் எனப் பொருள் இல்லை. இந்திய அரசியலமைப்பின்படி நிலம் என்பது மாநில பிரிவில் வருகிறது. எனவே ஒவ்வொரு மாநிலமும் இதை தங்களுக்கு ஏற்ப மாற்றி சட்டமாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும்.. இதனால் இந்த சட்டங்கள் அமலுக்கு வருவதில் காலதாமதம் ஏற்படலாம்.
வரவேற்பு
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதும், தகராறுகளைக் குறைப்பதுமே இதன் முக்கிய நோக்கம் என்கிறார்கள் வல்லுநர்கள். அவர்கள் மேலும் கூறுகையில், "இந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தானாகவே ஒரே மாதிரியாகச் செயல்படாது. நிலம் என்பது அரசியலமைப்பின் கீழ் மாநில பிரிவில் வரும். எனவே மாநிலங்களைப் பொறுத்து இது மாறலாம். அதேநேரம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற சில மாநிலங்கள் ஏற்கனவே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன" என்றார்.
டெபாசிட் பராமரிப்பு போன்றவற்றில் தெளிவான விதிகள் இருப்பதால் வாடகைதாரர்கள் இதை வரவேற்றுள்ளன. அதேநேரம் வாடகை செலுத்தாதவர்களை வெளியேற்றும் பிராசஸை எளிமையாகவும் தெளிவாகவும் மாற்றியதால் வீட்டின் உரிமையாளர்களும் கூட இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications