‘லட்டு’ போல கையில் வந்து விழுந்த நகல்.. ஓபிஎஸ்-க்கு கிடைத்த ‘செம்ம’ பாயிண்ட்.. இனி வேட்டை தான்!
சென்னை : உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு நகல் ஓபிஎஸ் தரப்புக்கு 'ட்ரம்ப்' கார்டாக கிடைத்திருக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பை முன்வைத்தே பொதுக்குழு முடிவுகளுக்கு தடை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தங்கள் தீர்ப்பை சுட்டிக்காட்டியது தவறானது எனத் தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
தாங்கள் அப்படி உத்தரவைப் பிறப்பிக்கவே இல்லை என்றும், தங்கள் உத்தரவை சென்னை ஐகோர்ட் நீதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு
ஈபிஎஸ் தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுச் செயலாளர் தான் கட்சியின் அதிகாரமிக்க தலைவர் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் ஈபிஎஸ்.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன?
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நடந்தது பெரும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான். உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பால் பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றத்தைக் கை காட்டியது உச்ச நீதிமன்றம். உட்கட்சி விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளுங்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஐகோர்ட் உத்தரவு என்ன?
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 11ஆம் தேதி 9 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவித்தார். அதன்படி பொதுக்குழுவுக்கு கால் மணி நேரம் முன்னதாக தீர்ப்பளித்த நீதிபதி, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளதால் அதனை மீற முடியாது என்றும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டார்.

தவறான உத்தரவு
இந்த உத்தரவை தொடர்ந்து, பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனதும், ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களும் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, பொதுக்குழு நடத்தப்பட்டது செல்லாது என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். இந்த வழக்கு கடந்த ஜூலை 29ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஜூலை 29 தீர்ப்பு விவரம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, "அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து, 2 வாரங்களில் தீர்வு காண வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தீர்ப்பு நகல்
இந்நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வின் இந்த தீர்ப்பு நகல் முழுமையாக வெளியாகியிருக்கிறது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தவறாகச் சுட்டிக்காட்டி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

ஐகோர்ட் நீதிபதி தவறு
அதிமுக பொதுக்குழுவை நடத்தலாமா, கூடாதா என கடந்த ஜூலை 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற அமர்வில் நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, உட்கட்சி முடிவில் தலையிட முடியாது என்றும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றே கூறியுள்ளோம், ஆனால் எங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வலுவான பாயிண்ட்
தங்கள் உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்துள்ள வலுவான பாயிண்டாக பார்க்கப்படுகிறது. கட்சி கிட்டத்தட்ட தன்னை விட்டுக் கைவிட்டுப் போகும் சூழலில் பூஸ்ட் போல கிடைத்துள்ளது இந்த விஷயம். உச்ச நீதிமன்றமே பாயிண்ட் எடுத்துக் கொடுத்துள்ளதால் இதைக் கையில் எடுத்துக்கொண்டு இனி முன்னேறலாம் என திட்டமிட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு.

எதுவுமே செல்லாது
பொதுக்குழுவை நடத்தலாம் என ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு தவறான புரிதலால் வழங்கப்பட்டது என்றால், அதன் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழுவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என எதுவுமே செல்லாததாகி விடும் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை எடுத்து வைக்க தயாராகி வருகிறது. இதற்காக மூத்த சட்ட நிபுணர்களிடம் அவசர ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

திரித்துப் பரப்புகிறார்கள் - புகழேந்தி
இந்த தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டிருந்த விவரம் ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு விவரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், "ஐகோர்ட்டின் தீர்ப்பு தவறானது என உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லியுள்ளது. மீண்டும் தெளிவாக 2 வாரங்களில் ஐகோர்ட்டை விசாரிக்கச் சொல்லியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்ப்பு விவரங்களை தவறாகத் திரித்து பரப்புவதால் வந்த பிரச்சனை" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications