"எந்த பக்கம் திரும்பினாலும் அப்செட்" பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே.. தோல்விக்கு என்ன காரணம்?
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியதன் மூலம் அடுத்த அப்செட்டை நிகழ்த்தியுள்ளது. இதனால் குரூப் பி பிரிவில் உள்ள அணிகளிடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய நாள் முதலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் விருந்தாக அமைந்து வருகிறது. இருமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் குரூப் சுற்றோடு வெளியேற, தொடக்கமே அதிர்ச்சியும் பரபரப்பாக அமைந்தது.
தொடர்ந்து இலங்கை அணியை நமிபியாவும், இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணியும் வீழ்த்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இதுஒரு பக்கம் இருக்க மழையால் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆட்டமும் கைவிடப்பட்டு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அப்செட்டும், மழையும் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தி வந்தது.

ஜிம்பாப்வே பேட்டிங்
இந்த நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களுக்கு 130 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சான் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், ஷடாப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தோல்வி
131 ரன்கள் மட்டுமே இலக்கு என்பதால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெறும் என்றே கணக்கிடப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ஏற்பட்டுள்ள பரபரப்பு, குரூப் பி பிரிவிலும் ஏற்பட்டுள்ளது.

தொடரும் அப்செட்
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அப்செட் என்றே வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் துணை நாடுகளாக பார்க்கப்படும் சிறிய அணிகளில் இருக்கும் வீரர்கள் அண்மைக் காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடி அதிக பழக்கம் கொண்டவர்கள். அதனால் அவர்களை அண்டர் டாக் அணிகளாக கருதுவது பெரிய அணிகளுக்கு பாதிப்பையே உருவாக்கும்.

தோல்விக்கு காரணம் என்ன?
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மைதானங்களில் அனைத்து அணிகளும் பவர் ப்ளே ஓவர்களில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் விக்கெட்டை பறிகொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையே பலரும் ஆட்டமிழக்க காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக பெரிய அணிகள் சிறிய அணிகளிடம் தோல்வியடைய காரணமாக அமைந்து வருகிறது.

பவர் ப்ளே ஓவர்களில் பிரச்சினை
இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியிடம் தோல்வியடைவதற்கு முதல் நிலையில் ஆடிய வீரர்கள் அனைவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே காரணம். அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் எந்த அணியால் பவர் ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியவில்லையோ, அந்த அணி நிச்சயம் தோல்வியை சந்திக்கும்.

டி20 கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்டின் அடிப்படை பவர் ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பது தான். அதனை மாற்றியதே பல அணிகள் டி20 உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியடைய காரணமாக இருக்கிறது. இனி வரும் நாட்களில் நடைபெறும் போட்டிகளில் பரபரப்பை அதிகமாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு போட்டியுமே இறுதிப் போட்டிக்கு நிகரான சுவாரஸ்யத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications