வெற்றி இல்லதரசி மாடித் தோட்டம் சரி! அதென்ன வெற்றி வான்மகள் திட்டம்! பட்ஜெட்டில் அறிவித்த அமைச்சர்!
சென்னை: வெற்றி வான்மகள் திட்டத்தில் பெண்கள் டிரோன்களை இயக்குபவராக பயிற்சி அளிக்கப்படும் என வேளாண் அமைச்சர் வினோத், பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத் கூறியிருப்பதாவது: கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற பெயரில் ரூ 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும். அதன்படி முதல் பரிசு ரூ 2.50 லட்சமும், 2ஆவது பரிசு 1.50 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசு ரூ 1 லட்சமும் வழங்கப்படும். அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.
முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
100 பெண்கள் உள்பட 500 பேருக்கு டிரோன் இயக்க பயிற்சி உரிமம் வழங்கப்படும். பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
டிரோன்களை கொண்டு பூச்சிகளை அழித்தல், பயிர்களுக்கு நடுவே மறைந்திருக்கும் காட்டு விலங்குகளை கண்டறிதல் , பயிர்களை தின்னும் வெட்டுக்கிளிகளை அழித்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம்.


Click it and Unblock the Notifications
