டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் வேண்டாம்.. யுஜிசி வழங்கும் இரண்டு வாய்ப்பு.. முழு விவரம்
சென்னை: இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், தங்களது பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ முடிக்கும்வகையில் கால அளவை தேர்வு செய்து கொள்ளும் திட்டத்தை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இதன்படி 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் உள்ள படிப்புகளை தாமதமாக முடிக்க அல்லது முன்கூட்டியே முடிக்க என இரண்டு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக கருத்துக்கேட்புக்காக வரைவு விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு அவ்வப்போது தேசிய கல்விக் கொள்கையை (National Policy on Education) உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உருவாக்கி இருந்தது. அடுத்ததாக இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு வெளியிட்டது. அந்த கல்வி கொள்கை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டது.

இந்த கல்வி கொள்கை இந்தியா முழுவதும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.. இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தில் மும்மொழி கொள்கை, நுழைவுத் தேர்வு, தாய்மொழி வழிக்கல்வி, டிகிரியை தாமதமாக அல்லது முன்கூட்டியே முடிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த இரண்டு வாரம் முன்பு நடந்தது.
இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதேபோல், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதன்படி மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்தும் படிக்கலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளது" என்று கூறினார்.
யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் கூறியபடியே இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், தங்களது பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ முடிக்கும்வகையில் கால அளவை தேர்வு செய்து கொள்ளும் திட்டத்தை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இதற்கான வரைவு விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் இளங்கலை பட்டப்படிப்பில் 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், இந்த படிப்புகளை முன்கூட்டியே முடிக்க 'துரிதப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்', தாமதமாக முடிக்க 'நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்' என்ற 2 வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்க பல்கலைக்கழக மானிய குழு திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிலையான வழிகாட்டுதல்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு ஒப்புதல் அளித்தது. இந்த வரைவு விதிமுறைகள், இணையதளத்தில் வெளியிடப்படும். அனைத்து தரப்பினரின் கருத்துகளும் பெறப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறும் போது, இளங்கலை பட்டப்படிப்பில் சேருவோர், முதல் செமஸ்டர் அல்லது 2-வது செமஸ்டர் முடிந்தவுடன், தங்கள் கற்றல் திறன் அடிப்படையில், துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தையோ அல்லது நீட்டிக்கப்பட்ட திட்டத்தையோ தேர்வு செய்ய முடியும். அந்தந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கும் குழு, அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும். மாணவர்களின் திறன் அடிப்படையில், அந்தந்த திட்டத்துக்கு மாணவர்களை சேர்க்கும். உதாரணமாக துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வழக்கமான கால அளவில் படிக்கும் மாணவர்களை போன்று, அதே பாடத்திட்டமும், மொத்த கிரெடிட்களும் இருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டரிலும் அதிக கிரெடிட்களும், நீட்டிக்கப்பட்ட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு குறைவான கிரெடிட்களும் வழங்கப்படும். இது வழக்கமான பட்டத்துக்கு சமமானது ஆகும்
அதேபோல் ஒவ்வொரு பாடப்பிரிவையும் அதிகபட்சம் 2 செமஸ்டர்கள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இரு திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு உடனே பட்டத்தை வழங்க வேண்டும். வழக்கமான கால அளவு முடியும்வரை காத்திருக்க தேவையில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் ஒரு சுய குறிப்பு இடம்பெறும். ''மாணவர் வழக்கமான கால அளவுகொண்ட படிப்புக்கு தேவைப்படும் கல்வித்தேவையை துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ பூர்த்தி செய்துள்ளார். இந்த பட்டம், வழக்கமான பட்டத்துக்கு சமமானது. மேற்படிப்புக்கும், அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் வழக்கமான பட்டத்துக்கு சமமானது'' என்ற சுய குறிப்பு எழுதப்படும். துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி சேர்ந்த மாணவர்களின் பட்டத்தில், ''4 ஆண்டு பட்டப்படிப்பை 6 அல்லது 7 செமஸ்டரில் முடித்துள்ளார்'' என்று குறிப்பிடுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications