வாடிவாசலில் சீறப்போகும் காளைகள்.. ஜல்லிக்கட்டு ஆரம்ப தேதியை அறிவித்த தமிழக அரசு
சென்னை: 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடங்கும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம்.

இதனை காண பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். மக்கள் வசதிக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான மைதானம் கட்டப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன.
கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 9 மாதங்களில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. அரங்கத்தின் நுழைவாயிலில் 4 பிரம்மாண்ட தூண்கள் எழுந்து நிற்கின்றன. போட்டியில் பங்கேற்க கொண்டு வரப்படும் காளைகளைக் கட்டிவைப்பதற்காக இடம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்படியே அதன் வழியே காளைகள் வாடி வாசலுக்கு வரிசையாக வருவதற்காக வழி செய்து தரப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடங்கும்.
புதுக்கோட்டை தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வாடிக்கையாகும். அந்த வகையில், ஜனவரி 2 ஆம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது 6 ஆம் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுக்க மதுரை அலாங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும். இதேபோல் அதிக வாடிவாசலையும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு தயார் ஆகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications