லட்டு சான்ஸ்.. 2 பேருக்கு.. "ரத்தக்கண்ணீரில்" ரத்தத்தின் ரத்தங்கள்.. நொறுங்கிய ஜெ.கனவு.. அடகடவுளே
அதிமுகவின் உட்கட்சி பூசலை பார்த்து தொண்டர்கள் கவலையில் சோர்ந்துள்ளனர்
சென்னை: பொன்விழா கண்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், அதிமுக என்ற கட்சியின் நிலைமையை கண்டு ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள் தொண்டர்கள்..
ஒரு கட்சிக்குள் அதிருப்தியும், பூசலும், எதிர்ப்பும் இருப்பது புதிது இல்லை.. அதிலும் ஆலமரம் போன்ற அதிமுக கட்சியில் இத்தகைய எதிர்மறை அம்சங்கள் காணப்படுவதும் புதிது இல்லை.
அந்த கட்சியின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்தபோதும்கூட, அவருக்கு எதிர்ப்புக்குரல்கள் கட்சியில் ஒலித்துக் கொண்டுதானிருந்தன.

ஜெயலலிதா
அதனால்தான், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது, அவருடன் இருந்தவர்கள், திமுகவுக்கே மறுபடியும் போய்விட்டனர்.. ஆனால், திமுகவுக்கு ஆரம்ப கட்டத்தில் சென்ற அந்த தலைவர்கள் அத்தனை பேரும் பலம் வாய்ந்தவர்கள் என்றாலும் தொண்டர்களின் செல்வாக்கை பெற்றவர்கள் இல்லை.. அதிமுகவில் தொண்டர்களின் செல்வாக்கை பெறுவதும் அவ்வளவு எளிது கிடையாது... ஜெயலலிதாவை கட்சிக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்தபோது, மூத்த தலைவர் எஸ்டிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினாரே தவிர, கட்சிக்குள் உட்கார்ந்து ஓபிஎஸ் போல பிரச்சனை செய்தது இல்லை.

ஆர்எம் வீரப்பன்
அவ்வளவு ஏன், ஆர்எம் வீரப்பன் போன்ற சீனியர்களை கட்சியில் இருந்து தூக்கியபோதும்கூட, கட்சி ஆபீசுக்குள் நேற்றைய தினம் போல ரணகளம் நடந்தது இல்லை.. ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராக ஜெயலலிதா அணியில் இருந்தவர் அறந்தாங்கி எஸ்.திருநாவுக்கரசர்... ஆனால், அவரே ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, கடந்த 1990ம் ஆண்டு 'அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம்' என்று தனிக்கட்சி ஆரம்பித்தபோதும், இப்படி பிரச்சனை செய்தது இல்லை.

ஜானகி அணி
எம்ஜிஆர் இருந்தபோதாவது, இந்த அளவுக்கு எதிர்ப்பும், அதிருப்தியும் வெடித்தது.. ஆனால், ஜெ.தலைமையில் கட்சி சென்றபோது, மொத்த பேரும் கப்சிப் தான்.. ஒருத்தருக்கும் வாய் திறந்து அந்தம்மாவிடம் வாதம் செய்யும் துணிச்சல் இருந்தது இல்லை.. கிட்டத்தட்ட மிலிட்டரி போல் கட்சியை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்.. குறைந்தபட்ச எதிர்ப்புகள் கூட காட்டப்படவில்லை.. கருத்துக்கள்கூட வெளிப்படையாக யாருமே சொல்லவில்லை.

ஜாக்கிரதை
அவ்வளவு ஏன், ஜெ.அணி & ஜா.அணி உருவானபோதுகூட இந்த அளவுக்கு அசிங்கம் நடந்தது இல்லை.. அப்போதும் மோதல்கள் இருக்கத்தான் செய்தது.. ஆனாலும் ஜெயலலிதா அந்த விஷயத்தை மிக ஜாக்கிரதையாக பார்த்து கொண்டார்.. ஆனால், நேற்றைய தினம் போல அதிமுகவில் ஒரு வன்முறையை இந்த தமிழ்நாடு இதுவரை கண்டது இல்லை.. அதிமுக ஆரம்பித்து எத்தனையோ முறை இந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட, இப்படி ஒரு ரணகளம் நடந்தது இல்லை..
எல்லாவற்றிற்கும் மேலாக, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.. அதாவது ஜெயலலிதாவை பதவியில் இருந்தே தூக்கி அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவை தவிர்த்து, பரவலாக பொதுமக்களுக்கு இப்போதுவரை உள்ள ஒரே சந்தேகம், ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை இப்போது எடப்பாடி ஏன் கிளப்புகிறார்? அதற்கான அவசியம் என்ன வந்தது என்பதே? ஒருவேளை இதற்கெல்லாம் காரணம் கட்சி சொத்துதானா?

டாக்குமெண்ட்கள்
ஜெயலலிதாவின் பதவியையே பறித்தாயிற்று.. அதிமுக அலுவலகத்தை போர்க்களம் போல் மாற்றியாகிவிட்டது.. முக்கிய ஆவணங்கள் "கொள்ளை" போய்விட்டது.. மண்டை உடைந்து தொண்டர்களுக்கு ரத்தம் வழிகிறது.. அதிகாரிகள் கட்சி ஆபீசுக்கு சீல் வைக்கிறர்கள்.. இவ்வளவும் நடந்தபோது, அங்கிருந்த ஜெயலலிதாவின் சிலையை பார்த்து ஒரு பெண் கதறி அழுகிறார்.. "அம்மா, அங்கே பாருங்கம்மா.. நீங்கள் இருந்தால் இப்படி நடக்குமா? ஒருத்தனுக்கு இவ்வளவு தைரியம் வருமா? நாதியத்து போய்ட்டோமே நாங்க... கதவை மூடிட்டாங்கம்மா" என்று தேம்பி தேம்பி அழுவதை பார்த்து மற்ற தொண்டர்கள் கண்கலங்கி செய்வதறியாது நிற்கிறார்கள். இந்த வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.

இப்படி ஆகிப்போச்சே
எம்ஜிஆர் , ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக இப்போ இப்படி ஆகிப்போச்சே என்று அதிர்ந்து போய் உள்ளனர் தொண்டர்கள்.. ஜெ.வுக்கு பிறகு கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளக்கூடிய திறமை இன்றைய தலைவர்கள் யாரிடமும் இல்லை என்பதே வெட்டவெளிச்சமாகி உள்ளது.. நூற்றாண்டு காலம் இந்த கட்சி வாழும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டார்.. தற்போது பொன்விழா கண்டு ஓராண்டுகூட முழுமையாக முடியவில்லை.. அதற்குள் கட்சி இன்று பிளவுபட்டு கிடக்கிறது.

பாஜக & திமுக
அதிமுகவுக்கு பலமே அதன் தொண்டர்கள்தான்.. நிர்வாகிகள் அணி மாறினாலும் தொண்டர்கள் அவ்வளவு லேசில் மாறிவிட மாட்டார்கள்... அதேநேரத்தில் அதிமுக பெரிய அளவில் பிளவுபடும்போதெல்லாம் எதிர்க்கட்சியான திமுகவிற்கே சாதகமாக அமைந்துவிடும்.. இந்த முறை, திமுகவுடன் சேர்த்து பாஜகவும் பலன் பெறும்.. அவ்வளவுதான்.. மற்றபடி, இன்றைய அதிமுகவின் நிலைமையை பார்க்கும்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தன்னை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்தப் போகிறது என்பதற்கு, எவ்வளவு தூரம் உட்கட்சி பூசல் இல்லாமல் இருக்கிறது என்பதே முதல் தகுதியாக இருக்க வேண்டும்.. அதை இந்த தலைவர்கள் பெறுவார்களா? என்பது சந்தேகம்தான்.












Click it and Unblock the Notifications