வாடகை வீட்டில் வசிப்போர் ரூ 1000 உரிமை தொகை பெற மின் அட்டை அவசியமா? அதிகாரி விளக்கம்
சென்னை: வாடகை வீட்டில் வசிப்போர் ரூ 1000 உரிமைத் தொகை பெற மின் கட்டண அட்டை அவசியமா என்ற கேள்விக்கு அதிகாரி பதிலளித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களும் டோக்கன்களும் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் கூறுகையில், மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை 3 வகைகளாக சரிபார்க்கிறோம். முதலில் பயோ மெட்ரிக் முறை, இரண்டாவது ஓடிபி முறை, மூன்றாவது முறை அட்டாச்மென்ட் முறையாகும்.

ஆதார் நம்பரை போட்டு பயோமெட்ரிக் முறை தேர்வு செய்தால் அந்த கருவியில் விரலை வைத்தால் அவர் குறித்த அடிப்படை தகவல்கள் எல்லாம் வந்துவிடும். அவற்றை விண்ணப்பத்தில் பிரிண்ட் செய்து கொள்ளலாம். மற்ற விவரங்களை பயனாளியே நிரப்புவார்கள். இதில் பெண் பயனாளி மட்டுமே வர வேண்டும். அவருடைய கணவர், மகன், மருமகன், தந்தை, மாமனார் என உறவினர்கள் யாரும் வரக் கூடாது.
ஆதார் எண் இல்லாதவர்களுக்கு கூட ரூ 1000 உரிமைத் தொகை பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு இல்லை என்றாலும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கலாம். எனவே பெண்கள் யாருமே பயப்பட தேவையில்லை. அது போல் அதிகாரப்பூர்வமற்ற நபர் சொல்லும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம். விண்ணப்பங்கள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு சப்மிட் செய்தவுடன் பயனாளி கொடுத்த செல்போன் எண்ணுக்கு "உங்கள் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது" என ரேஷன் கார்டு எண்ணுடன் மெசேஜ் வரும்.
பயோமெட்ரிக்கின் போது பயனாளியின் விரல் ரேகை வைத்தும் அந்த கருவி வேலை செய்யாத பட்சத்தில் வரும் பயனாளி ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை கொண்டு வந்தால், அதில் வரும் ஓடிபியை வைத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எனவே செல்போனுடன் பயனாளி வர வேண்டும். ஒரு வேளை எடுத்து வர மறந்துவிட்டால், வீட்டிற்கு போன் செய்தோ வீட்டிற்கு சென்றோ கொண்டு வரலாம்.
பயனாளி வரும் போது டோக்கனையும் விண்ணப்பத்தையும் கொண்டு வந்தால் போதும். வருமான சான்றிதழ் உள்ளிட்ட வேறு எதையும் கொண்டு வர தேவையில்லை. அத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய 4 அடிப்படை ஆவணங்களை கொண்டு வரவேண்டும். எனவே இந்த 4 ஆவணங்கள், டோக்கன், விண்ணப்பம் ஆகிய 6 தாள்களுடன் அவர்கள் வர வேண்டும்.
ஒரு வீட்டில் 3 பயனாளிகள் இருந்து அதில் ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் மற்ற பெண்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தக் கூடாது. இவர்களுக்கு புதிதாத ஓபன் செய்ய வேண்டும். ஆதார் இல்லாவிட்டால் ஆதார் ரெடி செய்து தரப்படும். முகாமுக்கு வர சொன்ன தேதியில் அவர்களால் வர முடியாமல் போனால், அடுத்த நாள் வரக் கூடாது. இது போல் வரமுடியாமல் போகும் பெண்களுக்கு கடைசி இரு தினங்கள் முகாம் நடத்தப்படும்.
அப்போது அவர்கள் வர வேண்டும். எனவே யாரும் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்ச தேவையில்லை. ஒரு வேளை ஒரு பயனாளி வாடகை வீட்டில் இருக்கிறார், அவருடைய வீட்டு மின் இணைப்பு எண் உரிமையாளர் பெயரில் இருந்தால் பிரச்சினை இல்லை, அதை நாங்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தி உண்மையா என சோதனை செய்துவிடுவோம். எனவே மின் அட்டை கொண்டு வர வேண்டும் என்பதில்லை. மேற்கூறிய 4 ஆவணங்கள் இருந்தால் போதும் என தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் 3600 க்கு மேல் செலுத்தும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை கிடையாது என அரசு விதிமுறை வகுத்துள்ளது. அதனால் அந்த மின் கட்டணத்தை கொண்டு வர வேண்டுமா என மகளிருக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில் அந்த ஆவணங்கள் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications