"அவதரித்த அம்மா.. பக்கத்தில போனாலே பவர் தெரியும்.." உருகும் பக்தர்கள்! யார் இந்த ஆதி பராசக்தி அம்மா?
சென்னை: "ஆதிபராசக்தி அம்மா அவதரித்துவிட்டார்.." இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இந்த போஸ்டரை பார்க்காத ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள். உலக மக்களை காக்க ஆதிபராசக்தி அவதரித்துவிட்டார்... வாருங்கள் என்ற அந்த போஸ்டர் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
போஸ்டர் மட்டுமின்றி போஸ்டரோடு சேர்ந்து மண்டபம் ஒன்றில் ஆதிபராசக்தி அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கை ஒன்றில் அமர்ந்து அருள் வழங்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பல மாலைகளை அணிந்து, கடவுள் அலங்காரத்தோடு, பின்னணியில் பாடல்கள் ஒலிக்க அங்கு வந்த பக்தர்களுக்கு அந்த பெண்மணி அருள் வழங்கி வந்தார். பழைய தெலுங்கு படங்களில் ஹீரோக்களை சாமியாக பார்ப்பது போல இவர் போகிற பாதை எல்லாம் பூவை தூவி பக்தர்கள் சீரியசாக காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அம்மா.. அம்மா என்று கண்ணீர்விட்டு வழிபாட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை பகிர்ந்த பலர் அதை வைத்து கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். இணைய உலகம் முழுக்க இப்போது அன்னபூரணி என்னும் ஆதி பராசக்தி அம்மாதான் டிரெண்ட். என்ன இவங்கதான் அவதாரமா.. பார்த்தா அப்படி தெரியலையே.. என்று கேட்டு பலர் கிண்டலாக ட்விட்டரில் போஸ்ட் செய்து வந்தனர்.

ஆதிபராசக்தி அம்மா
யார் இவங்க? திடீரென எப்படி அருள் கொடுக்கிறார்? எப்படி திடீரென வைரலாகிறார்.. என்று தெரிந்து கொள்வதற்காக போஸ்டரில் இருந்த நம்பருக்கே போன் செய்தோம். போனை எடுத்த ஆதிபராசக்தி அம்மாவின் பக்தர் ஒருவர்.. செய்தி நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்றதும் கொஞ்சம் ஸ்டிரிக்டாக பதில் அளிக்க தொடங்கினார்.. அவங்கதான் சாமி.. அவங்கதான் ஆதிபராசக்தியோடு அவதாரம்.

அவங்கதான் அவதாரம்
இதை உலகமே உணர்ந்து கொள்ளும் நாள் வரும். பல நூறு பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்த தினமும் வருகிறார்கள். அம்மாவை பார்த்ததும் அப்படியே அவரிடம் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். அவரின் சக்தி அப்படி.. நீங்களும் இங்கே வந்து பார்த்தால் உணர்ந்து கொள்வீர்கள், என்று கூறினார். பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்ணீர்விட்ட அந்த பக்தர்.. அவங்கதான் எங்களுக்கு கடவுள்.

கண்ணீர்விட்ட பக்தர்
என்னோட மனைவிக்கு ஸ்டிரோக் வந்தப்ப அவங்கதான் குணப்படுத்தி இருக்காங்க. இங்க பலருக்கு வந்த நோயை அம்மாதான் குணப்படுத்தி இருக்காங்க. இதை தெரிஞ்சிக்கிட்டு பல ஊர்களில் இருந்து நோயாளிகள் ஆதிபராசக்தி அவதாரத்தை பார்க்க வராங்க.. எனக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.. ஆத்தா இங்க வந்துட்டாங்க.. அப்பறம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.

உண்மையான அவதாரம்
இன்னொரு நிர்வாகியிடம் போன் செய்து பேசியதில், அவங்கதான் உண்மையான ஆதிபராசக்தி. அவங்க பக்கத்துல போனாலே அந்த பவரை உணர முடியும், என்று கூறினார். அவரின் பூர்வீகம், பெயர் குறித்து கேட்டதற்கு இரண்டு நிர்வாகிகளும் கூற மறுத்துவிட்டனர். அவங்க தனிப்பட்ட விவரத்தை தெரிவிக்க முடியாது. பர்சனல் பேச முடியாது.. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஆனால் அவங்கதான் ஆதிபராசக்தி. செங்கல்பட்டில் இருக்கிறார்.

செங்கல்பட்டில் தரிசனம்
போஸ்டரில் விவரம் இருக்கிறது. இங்கு வந்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். வரும் ஜனவரி 1ம் தேதி அருள் தருகிறார் வந்து வழிபடுங்கள் என்று கூறிவிட்டார்... என்ன இது பெயரை கூட சொல்லவில்லையே என்ற திகைப்பில் வேறு சிலரை விசாரித்ததில் அந்த பெண்மணி பெயர் அன்னபூரணி என்று தெரிய வந்தது.

இணையத்தில் டிரெண்ட்
மேலும் அந்த நிர்வாகியிடம் பேசியதில்.. எங்கள் அம்மா பல வருஷமா அருள் வழங்கிட்டு இருக்காங்க. இப்போதுதான் எல்லோருக்கும் தெரியுது. இணையத்தில் இப்போ டிரெண்ட் ஆகுறதுக்கும் அம்மா மனசு வச்சதுதான் காரணம் என்று பேசினார். ஆனால் கடைசி வரை அவரை பற்றிய விவரத்தையோ.. அவர் எப்படி அவதாரம் ஆனார் என்பதை பற்றியோ கடைசி வரை வாய் திறக்கவே இல்லை!












Click it and Unblock the Notifications