அந்த நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட்.. ஆபாச பேச்சு.. போலீசுக்கு போன ரோகிணி.. டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு
சென்னை : தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்ன நடந்தது?
கடந்த மாதத்திலிருந்தே ஹேமா கமிட்டி அறிக்கையால், கேரளாவில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார்கள் அடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் பாதிக்கப்பட்ட நடிகைகள், வெளிப்படையாகவே பேட்டிகளை தந்துகொண்டிருக்கிறார்கள்.

பாலியல் தொல்லைகள்: இதனிடையே, கேரளாவை போலவே, தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக ராதிகா, குஷ்பூ போன்ற சீனியர் நடிகைகளே குற்றஞ்சாட்டியிருந்தனர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்கள் குறித்தும், நிறைய பேர் சேனல்களில் பேட்டி தர ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்படித்தான், மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் கருத்து கூறியிருந்தார்.. அரசியல் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவை பற்றியும் அவ்வப்போது பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருபவர் காந்தராஜ்.. துணிச்சலுடன் காந்தராஜ் பேசும் பேச்சுக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
டாக்டர் காந்தராஜ்: இந்நிலையில், பல்வேறு நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது குறித்தும், கடந்த 7ம் தேதி ஒரு சேனலில் காந்தராஜ் பேசியிருந்தார்.. வலையில் சிக்கும் சில நடிகைகளை பற்றியும் அந்த பேட்டியில் சாடியிருந்தார் டாக்டர் காந்தராஜ்.
குறிப்பாக, "நடிப்பதற்கு முன்பேயே நடிகைகள் "ஓகே" சொல்லிவிட்டு, பல வருடம் கழித்து புகார் அளிக்கிறார்கள்.. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் இருந்து வருகிறது. நடிகர்கள் மட்டுமல்ல, டைரக்டர், கேமராமேன் உள்பட டெக்னீஷியன்களையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் நடிகைகள் இருக்கிறார்கள்" என்றெல்லாம் காந்தராஜ் பேசியிருந்தார்.
நடவடிக்கை: இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டாக்டர் காந்தராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிகை ரோகிணி, காந்தராஜ் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனரிடம் புகார் தந்திருந்தார்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது., இந்த கமிட்டியின் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ள நிலையில்தான், மேற்கண்ட புகாரை போலீசாரிடம் கொண்டு சென்றுள்ளார்.
நடிகைகள்: "நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக டாக்டர் காந்தராஜ் பேசியிருப்பதுடன், தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பையும் கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது.
நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வீடியோ யூடியூப் சேனலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கு பதிவு: நடிகர் சங்க விசாகா கமிட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரையடுத்து, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் காந்தராஜ் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
வாழ்க்கை நடத்தை: முன்னதாக ரோகிணி போலீசில் அளித்திருந்த புகார் இதுதான்: "MY INDIA 24X7 என்ற YOU TUBE சேனலில் பேசியுள்ள காந்தராஜ் அவர்கள் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என்று பேசியுள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இந்தப் பேட்டி சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் உள்ளது.
மறைந்த நடிகைகள் மஞ்சு அவர்கள், ஜெயலலிதா அவர்கள் முதல் தற்போது புகழில் உள்ள ஷகிலா அவர்கள் வரை எடுத்துகாட்டாக கூறி அவர்களுடைய வாழ்க்கை நடத்தை என தனக்கு சம்மந்தமில்லாத, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேட்டியளித்துள்ளார். பெண்களை அதிலும் சினிமாத்துறை சார்ந்த ஒட்டு மொத்த பெண்களையும் ஏளனமாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் சித்தரித்துள்ளது குற்ற செயலாகும்.
தண்டனைக்குரிய செயல்: இப்பேச்சுக்காக இந்நபர் தண்டிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆதாரமில்லாமல் சமூக வலைதளங்களில் புகழ் தேடும் கும்பல்களை கட்டுபடுத்த கூடும் என்று எண்ணுகிறோம். மருத்துவர் காந்தராஜ் தன் வயதிற்கும் கல்வித்தகுதிக்கும் சம்பந்தமே இல்லாதவாறு நடிகைகளின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததும் தண்டனைக்குரிய குற்ற செயலாகும்" என்றெல்லாம் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications