கெட்டப் பய சார் அந்த சின்ன பையன்! தவெக மாநாட்டில் விஜய்யின் குட்டி ஸ்டோரி! யார் அந்த பாண்டிய மன்னன்?
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சிறுவனை வைத்து விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியில் வந்த அந்த பாண்டிய மன்னன் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலர் தேடி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் அனல் பறக்கும் வகையில் பேசினார்.

விஜய், மாநாட்டுக்கு வந்தது முதல் தொண்டர்கள் கைகளை தட்டிக் கொண்டே இருந்தனர். அந்த அளவுக்கு அவருடைய பேச்சை ரசித்தனர். அவரும் சினிமாவில் வருவது போல் ஏற்ற இறக்கங்களுடன் தொண்டர்கள், ரசிகர்களுக்கு பிடித்த பாணியில் பேசியிருந்தார்.
இந்த மாநாட்டில் விஜய், குழந்தை அம்மா என அழைப்பது குறித்தும் பாம்புதான் அரசியல் என்பது குறித்தும் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லியிருந்தார். அதன் பிறகு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த அவர், "ஆவுன்னா சின்ன பையன், நேற்று வந்த பையன்னு சிலர் சொல்லிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்லலாமா" என கேட்டு விஜய் குட்டி சொன்னார்.
அவர் கூறுகையில், "ஒரு நாட்டில் பெரிய போர் வந்தது. திறமையான தலைமை இல்லாததால் சின்ன பையன் கையில் பொறுப்பு இருந்ததாம். அதனால் அந்த நாட்டில் இருந்த பெரிய தலைகள் எல்லாம் பயத்துல இருந்தாங்களாம். அந்த சின்ன பையன் நாட்டின் படையை ஏற்று நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு "போர்க்களத்திற்கு போவோம்" என்றாராம்.
அதற்கு அந்த பெரிய தலைகள் எல்லாம் "நீ சின்ன பையன்"னு சொன்னாங்ளாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்குத் தனியாக தன் படையுடன் சென்ற அந்த பையன், அடுத்து என்ன செய்தான் என்பதை தெரியாதவங்க படிச்சி தெரிஞ்சிகோங்க, படிக்காதவங்க, படிச்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இதை சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்கிறார்கள்" என விஜய் , அந்த சிறுவன் யார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.
இதையடுத்து விஜய் சொன்ன சிறுவன் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலர் தேடி வருகிறார்கள். அந்த இளம்வீரன், பாண்டியன் யார் என்றால் அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிறார்கள்.
இந்த பாண்டிய மன்னன் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இதனால் ஆட்சி பொறுப்பை அவர் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தந்தை இல்லாததால் அந்த நேரத்தில் பாண்டிய நாட்டை கைப்பற்றுவது எளிது என்பதால் சோழ நாட்டை சேர்ந்த ராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் சேர நாட்டை சேர்ந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழின், எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய 5 பேருடன் பாண்டிய நாட்டை நோக்கி படையெடுத்தனர்.
அந்த படைகளைப் பார்த்து அஞ்சாத நெடுஞ்செழியன் போருக்கு தயாராகி போர்க்களத்திற்கு சென்றார். அப்போது போர் செய்ய படையுடன் வந்த சேர, சோழர்கள் உள்ளிட்டோரை புறமுதுகிட்டு ஓட செய்தார். இதனால் தனது நெடுஞ்செழியன் என்ற பெயருக்கு முன்பு தலையாலங்கானத்துச் செருவென்ற என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. இதைத்தான் விஜய் தன்னுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார். தன்னை சின்ன பையன் என சொன்னால் தேர்தல் வரும் போது பெரிய கட்சிகளை புறமுதுகிட்டு ஓட செய்வேன் என்பதைத்தான் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் பூரித்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications