தமிழக ராஜ்யசபா தேர்தல் 2025! திமுகவில் யாருக்கெல்லாம் வாய்ப்பு? அதிமுகவில் 2 சீட்டுக்கு போட்டி
சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அந்த 6 இடங்களுக்கு யார் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம். ஏற்கெனவே இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இருந்து திமுகவைச் சேர்ந்த வில்சன், எம்.சண்முகம், எம்.எம். அப்துல்லா, மதிமுக வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்களது பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி தமிழகத்தில் 6 காலி பதவிகளுக்கு ராஜ்யசபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 2ஆம் தேதி
அதன்படி ஜூன் 2 ஆம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 10 ஆம் தேதியும் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 12 ஆம் தேதியும் ஜூன் 19ஆம் தேதி தேர்தலும் (அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும்) நடைபெறுகிறது.
ராஜ்யசபா உறுப்பினர்
இந்த நிலையில் யார் யாருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஒரு எம்பிக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு என்ற அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 ராஜ்யசபா இடங்களும் அதிமுகவுக்கு இரு இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணியில் கமலுக்கு ஓகே
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ராஜ்யசபா சீட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கமலுக்கு அந்த சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எம்பியாக இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்காது என்கிறார்கள். அதாவது 2019ஆம் ஆண்டு ஒப்பந்தபடி, வைகோவுக்கு மாநிலங்களவை சீட் கொடுத்தாகிவிட்டது. 2024 ஆம் ஆண்டு மக்களவை சீட் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனவே இந்த முறை ராஜ்யசபா சீட் கிடைக்காது.
வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
அது போல் திமுக சார்பில் வில்சனுக்கு மட்டும் மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களில் சட்டப்பூர்வமாக வாதங்களை முன் வைத்துள்ளார். அது போல் ஆளுநருக்கு எதிரான வழக்கிலும் வில்சன் திறம்பட செயல்பட்டார் என்பதாலும் அவர் ஸ்டாலின், உதயநிதியின் நன்மதிப்பை பெற்றவர் என்பதாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.
அப்துல்லாவுக்கும்தான்
அது போல் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அப்துல்லாவுக்கும் மீண்டும் சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள். அது போல் வழக்கம் போல் தொமுச சார்பில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்த போது மாநிலங்களவை சீட் கேட்டதாக நாசூக்காக செல்வப் பெருந்தகை சொல்லியிருந்தார். எனவே காங்கிரஸும் இந்த சீட்டை பெற முயற்சிக்கிறது என்கிறார்கள்.
அதிமுக நிலவரம்
அதிமுகவை பொருத்தமட்டில் கடந்த முறை எம்பியாக இருந்த அன்புமணி இந்த முறை பாஜக கூட்டணியில் இருக்கிறார். எனவே அதிமுக சார்பில் 2 எம்பிக்கள் தேர்வாகும் வாய்ப்புள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கிளீன் போல்ட் என்பதால் அதிமுகவுக்கு மக்களவை உறுப்பினர்கள் இல்லை.
முட்டி மோதும் நிர்வாகிகள்
மாநிலங்களவையில் அதிமுகவுக்கு தம்பிதுரை, சி.வி.சண்முகம் , சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். ஏற்கெனவே ராஜ்யசபா எம்பியான தர்மர் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். இதனால் ராஜ்யசபாவில் தங்களின் பலத்தை நிரூபிக்க அதிமுக கருதுகிறது. எனவே தென் மாவட்டம், கொங்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என தெரிகிறது.
அதிமுக வாக்கு
இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக அதிமுக வாக்களித்ததாக பிரேமலதா தெரிவித்திருந்தார். ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். 2026 ஆம் ஆண்டு யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் ஜனவரியில் அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பாமக நிலை என்ன
அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்ல பாமக ராமதாஸ் விரும்புகிறார். ஏற்கெனவே அப்பாவுக்கும் மகனுக்கும் கூட்டணியை யாருடன் அமைப்பது என்பது குறித்த பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணிக்குச் செல்ல ராஜ்யசபா சீட்டை பாமக கேட்கலாம் என தெரிகிறது. ஆனால் அதிமுகவில் இருக்கும் 2 ராஜ்யசபா சீட்களை பெற பலர் முயற்சித்து வருவதால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அழுத்தம் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications