மத்திய அரசு vs ஸ்டாலின்.. தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்ப்பது ஏன்? ஏற்படும் அரசியல் பாதிப்பு என்ன
சென்னை: மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இன்று கறுப்புக் கொடி போராட்டத்தையும் திமுக நடத்துகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பை திமுக எதிர்ப்பது ஏன்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டின் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் எனக் குற்றம்சாட்டிய திமுக, இன்று மாநிலம் தழுவிய கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகிறது. மேலும், இது தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒரு பெரிய போர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

ஸ்டாலின் எதிர்ப்பு
தங்களது கவலைகள் புறக்கணிக்கப்பட்டால், பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்று ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஒரு "பெரும் ஆபத்து" என்றும் "தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அச்சுறுத்தல் இப்போது யதார்த்தமாகிவிட்டது" என்றும் விவரித்தார்.
மத்திய அரசின் அணுகுமுறையை மோதல் போக்கைப் போன்றது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், எதிர்ப்பின் சின்னமாகத் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்படும் என அறிவித்தார். மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கத் தவறினால், அது கடுமையான அரசியல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மாநில உரிமை
இது திமுகவை பற்றியது இல்லை என்றும் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது என்றும் அவர் கூறினார். கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்காக இந்தியா முழுவதிலுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன.. அது இந்தளவுக்கு மிகப் பெரியளவில் சர்ச்சையாக வெடிக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மக்கள் தொகை மாற்றங்களின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட மக்களவை இடங்களை மறுபகிர்வு செய்யும் செயல்முறையே தொகுதி மறுசீரமைப்பு ஆகும். அரசியலமைப்பின் 82வது பிரிவின் கீழ், ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு
தற்போது மக்களவையில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.. இந்த தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக (மாநிலங்களுக்கு 815 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 ஆகவும்) அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள 543 என்பது 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதைத் தவிர்க்க, அதன் பிறகு தொகுதி மறுசீரமைப்பு முடக்கப்பட்டு இருந்தது. ஆனால், மத்திய அரசு இப்போது முன்மொழிந்துள்ள திருத்தம் இந்த முடக்கத்தை நீக்கி, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய மறுசீரமைப்பைச் செயல்படுத்த முயல்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை விவரம் கணிசமாக மாறியுள்ளதால், பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகியுள்ளன என்று மத்திய அரசு வாதிடுகிறது.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையானது 2023ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு தரப்பில் கூறுகிறது..
ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார்?
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முயற்சியின் மிகக் கடுமையான விமர்சகர்களும் தலைவர்களில் ஒருவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு இது பாரபட்சமானது என்பதே அவரது நிலைப்பாடு. மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்களை மறுபகிர்வு செய்வது தெற்கு மாநிலங்களின் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் என்பது திமுக வாதம்!
அதிக மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை இது அதிகரிக்கும் எனவும், சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்யும் மாநிலங்களுக்கு இது தண்டனை அளிப்பது போல என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இது வரலாற்று அநீதி எனவும், வட-தெற்கு பிளவை இது அதிகரித்து, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சிதைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒருங்கிணைப்பு
இந்த விவகாரத்தில் பாஜக அல்லாத கட்சிகள் மற்றும் இதர மாநிலங்களை ஸ்டாலின் ஒன்றிணைத்து வருகிறார். மத்திய அரசு ஒருமித்த கருத்து இல்லாமல் இதை முன்னெடுத்தால், கடுமையான போராட்டங்களையும் அரசியல் பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாநில உரிமைகளுக்கான 1950கள் மற்றும் 60களில் திமுக நடத்திய மக்கள் போராட்டங்களின் வரலாற்றையும் அவர் நினைவுகூர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் இதை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications