கையெழுத்து போட வேண்டாம்! ஸ்டாலினுக்கு போன முக்கிய "மெசேஜ்".. விரோதம்! ஆளுநர் ரவிக்கு எகிறிய "பிரஷர்"
சென்னை: சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் திமுக தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் ஏன் கையெழுத்திடவில்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது.
சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். வரலாற்று ரீதியாக சில தவறான விஷயங்களை இவர் பேசுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதுதான் சனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம் என்று குறிப்பிட்டார்.அதோடு இல்லாமல் திராவிட கலாச்சாரம் இடையில் தோன்றியது என்றும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இவரின் செயல்பாடுகள் சில அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகின்றன.

திராவிடம்
திராவிடம் என்பதை மாயை என்றும், இந்தியா என்பது ரிஷிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்றும் கூட ஆளுநர் ரவி பேசி வருகிறார். நியமன பதவியான ஆளுநர் பதவியில் இருப்பவர் நடுநிலையோடு பேச வேண்டும். ஆனால் ஆளுநர் இப்படி பேசுவது விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அதிலும் சமீபத்தில் கோவை கார் வெடிப்பு என்ஐஏ விசாரணைக்கு தாமதமாக பரிந்துரை செய்யப்பட்டதை ஆளுநர் ரவி விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

ஆளுநர் ரவி
ஆளுநர் இப்படி செய்யும் அரசியலும், இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் அரசியலும், கொடுக்கும் பேட்டிகளும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்தபடி இருக்கிறது. இதற்கு சமாளிக்க முடியாமல் விளக்கம் கொடுத்தபடி வருகிறது திமுக. இந்த நிலையில்தான், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். மிக நீண்ட அறிக்கை இதற்காக வெளியிடப்பட்டது.

அறிக்கை
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று தாகமா என தெரியவில்லை.

என்ன சொன்னது?
எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதுபற்றி கவலைப்படவுமில்லை. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் ஆளுநர். அது அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா, என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கையெழுத்து
ஆனால் இந்த அறிக்கையில் திமுக தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை. முதலமைச்சராக இருப்பதால் கவர்னருக்கு எதிரான கண்டனத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்யப்பட்டதாலே அவர் கையெழுத்திடவில்லையாம். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக இப்படி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட கூடாது. அது தவறாக முடிய வாய்ப்பு உள்ளது என்று அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறதாம்.

டி. ஆர் பாலு
மாறாக திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவை கையெழுத்திட சொன்னார் ஸ்டாலின். அதன்படி அவர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டார் என்கிறது திமுக சோர்ஸ்கள். இந்த நிலையில், ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று ஆளுநருக்கே அறிவுறுத்துவதெல்லாம் வெறும் அறிக்கைக்கு மட்டுமே உதவும் என்கிற ஆதங்கமும் திமுக தரப்பில் எதிரொலிக்கிறது.ஏனென்றால் அறிக்கையால் என்ன பயன் வந்துவிடும். எதிர்ப்பு மட்டுமே பதிவாகும்.

அழுத்தம்
ஆனால் ஆளுநருக்கு இதனால் பெரிய பிரஷர் இருக்காது என்று திமுக நினைக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறுக என்று ஜனாதிபதியிடம் திமுக தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஒத்த சிந்தனையுள்ள தமிழக எம்.பி.க்கள் அனைவரும் சந்தித்து வலிமையாக கோரிக்கை வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பில் எதிரொலிக்கிறது. தோழமைக் கட்சிகளின் தலைவர்களிடமும் இதே கருத்து இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications