என் வாரிசுக்கு ராஜ்யசபா சீட் தர முடியாதோ? எடப்பாடியிடம் நேருக்கு நேர் எகிறிய செங்கோட்டையன்!
சென்னை: தமது மகனுக்கு ராஜ்யசபா சீட் தர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாலேயே அதிமுகவில் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தொடர்ந்து கலகக் குரல் எழுப்பி வருகிறார் என்கின்றன எடப்பாடி பழனிசாமி ஆதரவு வட்டாரங்கள். ஆனால் செங்கோட்டையனை ஓரம் கட்டிவிட்டு அவருக்கு எதிரான கோஷ்டியை ஈரோடு மாவட்டத்தில் வளர்த்துவிடுவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டுவதுதான் இத்தனைக்கும் காரணம் என்கின்றனர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.
அண்ணா திமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கலகக் குரல்கள், தனிக் கட்சிகள் உதயமாவது, பின்னர் மீண்டும் இணைவது என்பது இயல்பான ஒன்றுதான். அதிமுகவில் 1980களில் எம்ஜிஆருக்கு எதிராக எஸ்டி சோமசுந்தரம், தனிக்கட்சியே தொடங்கினார்; அதே எஸ்டி சோமசுந்தரம் 1990களில் ஜெயலலிதாவின் பிரசார வேனில் தொங்கியபடியே வலம் வந்தார் என்பதெல்லாம் வரலாறு.

செங்கோட்டையனின் கலகம்
அதிமுகவில் தற்போது செங்கோட்டையனின் கலகக் குரல் காலம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் செங்கோட்டையன. எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியை புறக்கணித்தது தொடங்கி சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனியே சந்தித்ததுவரை இந்த கலகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பாஜக பக்கம் போகிறாரோ?
இதனிடையே சென்னை நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், பிரதமர் நரேந்திர மோடியை மிக அதீதமாக புகழ்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் செங்கோட்டையன் பாஜக பக்கம் தாவக் கூடும் என்கிற யூகமும் உலா வருகிறது. அதிமுக- பாஜக இடையே உக்கிரமான மோதல் நடைபெறும் நிலையில் செங்கோட்டையனின் மோடி பாராட்டு பேச்சு கடும் கோபத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அநாகரீகம் என விமர்சித்த அதிமுக
இதனிடையே அதிமுகவில் இருந்து செங்கோட்டையனின் நடவடிக்கைகளுக்கு முதல் முறையாக கண்டனக் குரல் வெளிப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், செங்கோட்டையனின் செயல் அநாகரீகமானது என விமர்சித்துள்ளார். இதற்கு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டனமும் தெரிவித்து செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
ராஜ்யசபா எம்பி பதவி கேட்டு பிடிவாதம்
தற்போது செங்கோட்டையனின் கலகக் குரல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, செங்கோட்டையன் தமது வாரிசுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை கேட்டு அடம் பிடித்தாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அப்படியெல்லாம் தரவே முடியாது என நேருக்கு நேர் சொல்லிவிட்டாராம். அப்போது செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசாரமான விவாதமும் நடந்துள்ளது. இதன் பின்னர்தான் செங்கோட்டையனின் கலகக் குரலே வெளிப்பட்டது என்கின்றன எடப்பாடி பழனிசாமி ஆதரவு வட்டாரங்கள்.
ஈரோடு மாவட்டத்தில் செங்க்ஸ் அத்தியாயம்
ஆனால் செங்கோட்டையன் தரப்போ, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் அத்தியாயத்தை முடித்துவிட்டு தமக்கான மாவட்டமாக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சிக்கிறார்; ஆளும் திமுக அரசுடன் இணைந்து செங்கோட்டையனுக்கு நெருக்கடியையும் தருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த கோபம்தான் அவரை இப்படி பொங்கி எழ வைத்துவிட்டது என குமுறுகின்றனர்.
செங்கோட்டையனுக்கு எதிராக சதி
மேலும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று அந்த தொகுதியையே தமது இரும்புக் கோட்டையாக வைத்திருக்கிறார் செங்கோட்டையன்; இனியும் செங்கோட்டையனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது; அப்படியே அவர் போட்டியிட்டாலும் அவரை தோற்கடித்துதான் ஆக வேண்டும் என்கிற திரைமறைவு வேலைகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவிட்டார் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொண்டுதான் செங்கோட்டையன் கலகக் குரலை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications