பெங்களூர் சம்பவம்! அடுத்த 3 நாட்கள் முக்கியம்! நேரில் வாங்க.. எடப்பாடிக்கு "டெல்லி" ஆர்டர்.. 4 அம்பு
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது அதிமுக வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது அவரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்றார். ஆனால் தனியாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி அனுமதி கொடுக்கவில்லை.
கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலையத்தில் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்தித்தார். அதற்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.
ஆனால் இந்த பயணத்திலும் எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. இரண்டு முறையும் எடப்பாடி ஏமாற்றத்துடன்தான் திரும்பி வந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்திற்கு கூட விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க 10 நிமிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தனியாக இப்படி நேரம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி ஜூலை மாதம் இறுதியில் டெல்லி சென்றார். 5 நாட்கள் பயணமாகி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் டெல்லியில் இருந்தார்.

சென்னை பயணம்
பயணத்தை பாதியில் முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பினார். டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி முதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டார். பல முறை பிரதமர் மோடியை இதில் சந்திக்க முயன்றும் எடப்படியால் சந்திக்க முடியவில்லை. பிரதமர் மோடியை தனியாக சந்திக்க முடியவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினார் என்று அப்போதே கூறப்பட்டது.

எடப்பாடி பயணம்
இந்த நிலையில் இப்போது எடப்பாடி டெல்லிக்கு செல்கிறார். இந்த முறை அவர் டெல்லி செல்ல காரணம்.. டெல்லியில் இருந்தே அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் பாஜக தலைகளிடம் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்துள்ளது என்கிறார்கள். இந்த பயணத்தில் கண்டிப்பாக அவருக்கு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எடப்பாடி சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.

3 நாட்கள்
மொத்தம் 3 நாட்கள் இந்த பயணத்தை எடப்பாடி மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது. இதில் அதிமுகவில் மீண்டும் தலைவர்கள் ஒன்று சேர்வது அல்லது எடப்பாடி கீழ் மொத்தமாக அதிமுக செல்வது பற்றி ஆலோசனை செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள். டெல்லியில் இருந்து வந்த அழைப்பு மட்டுமின்றி எடப்பாடி சார்பாக 4 விஷயங்கள் இந்த பயணத்தில் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள். விஷயம் 1 - தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் தனக்கு இருக்கும் பதவி, உரிமை, பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது பற்றி எடப்பாடி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

4 அம்புகள்
விஷயம் 2 - கர்நாடகாவில் நிலவும் பாஜக உட்கட்சி மோதலால் அங்கு எடியூரப்பா குறி வைக்கப்பட்டு உள்ளார்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் மீது லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான 12 கோடி ரூபாய்க்கு ஊழல் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுதான் பெங்களூரில் இதற்காக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்தது.

முக்கிய ஆலோசனை
இந்த நிலையில் இதை பற்றியும் எடப்பாடி டெல்லியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷயம் 3 - இது போக தமிழ்நாடு அரசியல் விவகாரம், லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது, பாஜக - அதிமுக உறவு பற்றி இதில் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விஷயம் 4 - விஜயபாஸ்கர் மீது குட்கா விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிய முடிவு எடுத்தது, வேலுமணிக்கு நெருக்கமான நபர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது பற்றியும் எடப்பாடி டெல்லி தரப்பிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications