"செத்துடலாம்னு இருக்கேன்.. ஸ்டாலினோடு பேச என்னை விடல.. காரணம் "அவர்"தான்.. நெல்லை கண்ணன் கண்ணீர்
ஸ்டாலினை சந்திக்க கோரி நெல்லை கண்ணன் உருக்கமான பதிவு போட்டுள்ளார்
சென்னை: "79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார்" என்று நெல்லை கண்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டவர்.
மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்..

படுதோல்வி
ஆனால், கருணாநிதி எதிர்ப்பு கொள்கை மிக்கவர்.. கருணாநிதியை நிறைய விமர்சித்து வந்ததுடன், ஒரு நாளிதழ் ஒன்றில், அதை பற்றி ஒரு தொடர் கட்டுரையே எழுதியவரும்கூட.. 1996-ஆம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். அன்று அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.

கூக்குரல்கள்
அதைவிட முக்கியமாக, கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அந்த சம்பவம் குறித்து தமிழகமே அதிர்ந்து போயிருந்தது.. பலரும் தங்கள் கண்டனங்களையும், வருத்தத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் நெல்லை கண்ணன் மட்டும், கருணாநிதி கைதாகியபோது எழுப்பிய சப்தத்தையும், கூக்குரலையும் கிண்டல் செய்து பேசினார்.. போதாக்குறைக்கு எந்த நேரமும் கருணாநிதியை காங்கிரஸ் சார்பாக திட்டிக் கொண்டே இருந்தார்.

காலசக்கரம்
ஆனால், கால சக்கரம் வேகமாக சுழன்றது.. ஸ்டாலின் முதல்வரானார்.. நெல்லை கண்ணனின் இயல்பும் மெல்ல மெல்ல அடியோடு திரும்பியது.. இப்போது திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, ஸ்டாலினையும், திமுகவையும் மாறி மாறி பாராட்டிக் கொண்டு வருகிறார் நெல்லை கண்ணன்.. சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில், காமராஜரைப்போல் முழு நல்லவனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று ஓபனாகவே பேசியிருந்தார்.

கண்ணீர் விட்ட நெல்லை கண்ணன்
அதுமட்டுமல்ல, சென்னையில் விசிக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றபோது, நெல்லை கண்ணன் பேசிய உருக்கமான பேச்சு தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது.. "இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே., திருமா நீங்களும் உங்கள் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதல்வராக பதிவேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவுடன் உங்கள் துணைவியார் கண்கலங்கினார் அப்போது நானும் கண்கலங்கி விட்டேன். நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்" என கண்ணீர் மல்க பேசியிருந்தார். அத்துடன் காமராஜரோடு முதல்வர் முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு நெல்லை கண்ணன் பேசியது பேசுபொருளானது.

நொந்து போயுள்ளேன்
இந்நிலையில், நெல்லைக்கண்ணன் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளார்.. 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று தன்னுடைய முகநூலில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.. தன்னுடைய ஃபேஸ்புக் பதில், வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

கலங்கிய நெல்லை கண்ணன்
விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, 'இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது' என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். இன்று ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை.

தினேஷ் மறுக்கிறார்
79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன். மரணம் தானே உறுதி" என்று நெல்லை கண்ணன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். இந்த பதிவு திமுக களத்தில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. நிச்சயம் இது முதல்வரின் பார்வைக்கு செல்லும் என்றும், விரைவில் நெல்லை கண்ணனை, ஸ்டாலின் அழைத்து பேசுவார் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications