சுருங்கிய அதிமுக.. 2 மேட்டரிலும் பக்கா "சைலன்ட்".. எட்டி கூட பார்க்காத எடப்பாடி.. மனசே விட்டு போச்சே
சென்னை: தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு முக்கியமான விஷயங்களில் பக்க சைலண்ட்டாக இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் இடையிலும் இது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தன்னை பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு சுற்றி வருகிறது பாஜக. 4 எம்எல்ஏக்கள் மட்டுமே அக்கட்சிக்கு இருக்கின்றனர்.
அதிலும் ஒரு எம்எல்ஏ அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்றுவிடுகிறார். இருப்பினும் பெரிதாக பூத் ஏஜெண்டுகள் கூட இல்லாத பாஜக, தாங்கள்தான் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

அதிமுக
ஆனால் களத்தில் இருக்க வேண்டிய.. 60+ எம்எல்ஏக்களை கொண்ட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக களத்திலேயே இல்லை என்பதுதான் அதிமுகவினரை அதிர வைத்து உள்ளது. முக்கியமாக இரண்டு விஷயங்களில் அதிமுக பெரிய அளவில் மௌனம் காத்தது கட்சியினரை குழப்பி உள்ளது. முதல் விஷயம் கோவை குண்டுவெடிப்பு வழக்கு.. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்தே போலீஸ் மீது குற்றச்சாட்டு வைத்து வந்தார். அதில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள்.'

விடவில்லை
ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே இதில் அரசியல் ரீதியாக அண்ணாமலை தீவிரமாக கவனம் செலுத்தினார். இந்த விவகாரத்தை பாஜக மிக கவனமாக கையாண்டது.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி பெரிதாக குரல் கொடுக்கவில்லை. இதற்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டார். விசாரணை முறையை விமர்சனம் செய்து அறிக்கையில் தாக்கி இருந்தார். அவ்வளவுதான். அதற்கு மேல் அவர் இந்த விவகாரத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. முக்கியமாக அதிமுக வலுவாக இருக்கும் கோவை விவகாரத்தில் கூட எடப்பாடி பழனிசாமி அமைதி காத்தது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏன் எடப்பாடி இப்படி சைலண்ட்டாக இருக்கிறார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆப்சென்ட்
தற்போது சென்னை மழை விவகாரத்திலும் எடப்பாடி சொதப்பி இருக்கிறார். சென்னையில் மழை நாட்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி உள்ளது. ஆனால் வடசென்னையில் சில இடங்களிலும், கத்திப்பாரா போன்ற சில இடங்களிலும் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி இருந்தது. ஒரு சில இடங்களில் தண்ணீர் இன்னும் வெளியேறவில்லை. இந்த விவகாரம் பற்றி சென்னையே நீரில் மிதப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வைத்தார். ஆனால் அவர் அறிக்கையை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

சென்னை வரவில்லை
முக்கியமாக அவர் சென்னைக்கே வரவில்லை. சென்னை பக்கமே வராமல் சென்னையில் நீர் இருப்பதாக அவர் பேசி உள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இது போன்ற விவகாரங்களில் மக்களுடன் மக்களாக நிற்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தற்போது கோட்டை விட்டுள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுகவினர்.. எடப்பாடி பழனிசாமி நல்ல துடிப்பான தலைவர். ஆனால் அவர் சென்னையில் இல்லாததுதான் பிரச்சனையே.

சென்னை
சென்னை பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. ஏன் கோவை விவகாரத்திலும் அவர் தலையிடவில்லை . கோவை கார் வெடிப்பை போய் அவர் பார்த்து இருக்கலாம் ஆனால் செய்யவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக ஸ்கோர் செய்கிறது. அதிமுக சுருக்கிக்கொண்டு இருக்கிறது என்று மனசை விட்டு பேசுகிறார்கள் எடப்பாடி ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி சேலத்தில் மட்டுமே இருக்க கூடாது, அரசியல் செய்ய அவர் சென்னைக்கும் அடிக்கடி வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications