தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சத்தில் முட்டை விலை.. இதற்கு என்ன காரணம்.. எப்போ தான் குறையும்?
சென்னை: தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பண்ணை கொள்முதல் விலையே முதல்முறையாக 6 ரூபாயைக் கடந்துவிட்டது. தமிழகத்தில் திடீரென முட்டை விலை இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மனிதர்களுக்குத் தேவையான புரதச் சத்துகள் அனைத்தும் முட்டையில் அதிகமாக இருக்கிறது. முட்டை குறைந்த விலையிலும் கிடைப்பதால் ஏழைகள் தங்கள் புரதச் சத்துகளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவாக முட்டையே இருக்கிறது. ஆனால், கடந்த சில காலமாகவே முட்டை விலை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முட்டை விலை உச்சம்
இப்போது நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6-ஐ எட்டியுள்ளது. முட்டை பண்ணை விலை இந்தளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல்முறையாகும். இன்று நவம்பர் 19ம் தேதி நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.05 ஆக உள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் முட்டை கொள்முதல் விலை அதிகபட்சமாக ரூ.5.95 ஆக இருந்தது. இந்தாண்டு அதையும் தாண்டி விலை போய்விட்டது. இருப்பினும், முட்டை விலை இப்போதைக்குக் குறைவது போலத் தெரியவில்லை.
வியாபாரிகள் சொல்வது என்ன
இது தொடர்பாக முட்டை வியாபாரிகள் கூறுகையில், "நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6ஐ எட்டுவது இதுவே முதல் முறை.. பொதுவாகவே குளிர்காலங்களில் முட்டை பயன்பாடு அதிகரிக்கவே செய்யும்" என்கிறார்கள். நாமக்கல்லில் சராசரியாக ஒரு நாளைக்கு 6.5 கோடி முதல் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 80 லட்சம் முதல் ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காலநிலை மாற்றங்கள் மற்றும் பறவைக்காய்ச்சல் காரணமாகப் பறவைகள் கொல்லப்படுவதும் உற்பத்தி குறையவும் விலை உயரவும் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் தினசரி முட்டை உற்பத்தியில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
காரணம் என்ன
முட்டை விலையைப் பொறுத்தவரை எப்போதுமே அது நவம்பர் முதல் ஜனவரி வரை கணிசமாக உயரவே செய்யும். கார்த்திகை தீபம் மற்றும் சபரிமலை யாத்திரை சீசன் காரணமாக முட்டை தேவை சற்று குறைந்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின்போது முட்டைக்கான தேவை வெகுவாக அதிகரிக்கும் என்றார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தேவைப்படும் கேக் செய்ய பேக்கரி, ஹோட்டல்களில் முட்டை தேவை பல மடங்கு அதிகரிக்கிறதாம். முட்டை விலை அதிகரிக்க இதுவே பிரதானக் காரணமாக இருக்கிறது.
சென்னை விலை
நாமக்கல்லின் முட்டை விலை பெரும்பாலும் ஹைதராபாத் விலையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. அதாவது ஹைதராபாத் விலையை விட 30 பைசாவுக்கு மேல் சென்றால் கூட, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள வியாபாரிகள் நாமக்கல்லைத் தவிர்த்துவிட்டு ஹைதராபாத்திலிருந்து முட்டைகளை வாங்கத் தொடங்கிவிடுவார்களாம்.
உள்நாட்டில் விலை அதிகரிக்கும்போது அது ஏற்றுமதியையும் கூட பாதிக்கிறதாம். ஏனென்றால் முட்டை ஏற்றுமதியில் நமக்கு முக்கிய போட்டியாக இருப்பதே துருக்கி தான். நமது நாட்டில் விலை ஏறும்போது சர்வதேச நாடுகள் துருக்கி பக்கம் செல்வதால் ஏற்றுமதியும் கூட சற்று குறையும்.
நீடிக்குமா?
அதேநேரம் இந்த விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் உணவகங்களில் முட்டை சார்ந்த உணவுகளின் விலை உயரவும் வாய்ப்பு குறைவே என்றே சொல்கிறார்கள். சில பொருட்களின் விலை ரூ.2 வரை உயரலாம் என்றும் அதைத் தாண்டி உயர வாய்ப்பில்லை என்கிறார்கள். சில வாரங்களிலேயே முட்டை உற்பத்தி சீராகி, தேவையும் நிலையாகிவிடும் என்றும் அப்போது விலை குறைந்துவிடும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications