சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருக்குறளையும் திராவிடத்தையும் ஆளுநர் சீண்டுவது ஏன்? - சொல்ல மறுக்கும் உண்மைகள் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: திருக்குறளில் 'ஆதிபகவன்' என்ற சொல்லை, உள்நோக்கத்துடன் ஜி.யு. போப் மொழிபெயர்த்துவிட்டதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்ற சொல் குறித்து முன்வைத்த தகவல்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டினை தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநராக பொறுப்பேற்கத் தமிழகம் வந்தபோது முதன்முதலாக தனக்குப் பரிசளிக்கப்பட்ட நூல் திருக்குறள் என்றும் அதனைக் கடந்த ஒரு வருடமாகப் படித்து வருவதாகவும் குறிப்பிட்ட ஆர்.என்.ரவி, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு' என்ற குறளை ஜி.யு.போப் ஆங்கிலத்தில், 'A, as its first of letters, every speech maintains; The 'Primal Deity' is first through all the world's domains' என்று மொழிபெயர்த்துள்ளார்.

அதில், 'Primal Deity' என்ற வார்த்தை சரியல்ல; God என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். அதிலுள்ள ஆன்மிகப் பொருளை ஆன்மிகம் அற்றதாக அவர் மாற்றிவிட்டார். இது காலனி ஆட்சியாளர்கள் செய்த தவறு' எனக் குறிப்பிட்டார்.

சாதாரணமாக, Primal Deity என்ற வார்த்தையைக் கூகுளில் போட்டு அர்த்தம் தேடினால் Primal Deities are the ancient deities who it is believed created the gods என்கிறது. ஆதி தெய்வம் (Primal Deity) என்பது கடவுளை உருவாக்கிய பண்டைய தெய்வம் என்பதாக இதற்குத் தமிழில் பொருள் கூறலாம். ஆக, Primal Deity என்ற வார்த்தை சரியானது. ஆனால், அதில் ஆளுநர் குற்றம் கண்டுபிடிக்கிறார்.

சூழலைக் காக்கும் 'மஞ்சப் பை’ - வேகமெடுக்கும் முதல்வர் ஸ்டாலினின் புரட்சி திட்டம் சூழலைக் காக்கும் 'மஞ்சப் பை’ - வேகமெடுக்கும் முதல்வர் ஸ்டாலினின் புரட்சி திட்டம்

தவறு செய்தாரா ஜி.யு.போப்?

தவறு செய்தாரா ஜி.யு.போப்?

இதே விழாவில், திருக்குறளை படிக்கும் ஒவ்வொரு முறையும் வியப்படைவதாகக் கூறிய ஆளுநர், 'குறளில் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் நிறைந்தவை.பெரிய கருத்துகளை ஒன்றரை வரியில் கூறிய வள்ளுவர் பெரிய அறிவாளி' என்று குறிப்பிடுகிறார்.

'வள்ளுவர் அறிவாளி' என்பதை உணர்ந்துதான் ஜி.யு,போப் 1886 ஆம் ஆண்டிலேயே திருக்குறளை மொழிபெயர்த்தார். அவர் இந்த வேலையைச் செய்வதற்காக மட்டும் இந்தியா வரவில்லை. இங்கு வந்தபோது திருக்குறளின் மீது காதல் ஏற்பட்டு அதனை மொழிபெயர்த்தார்.

ஆதிபகவன் என்ற சொல் இந்திய மொழிகள் பலவற்றில் உள்ளது. ஆகவே அது இந்தியாவின் பொதுச்சொல். அதற்கு 'கடவுள்' என்பதே சரியான பொருள் என்கிறார் ஆளுநர். ஆனால்'ஆதிபகவன் என்ற சொல்லே பிற்காலத்தில் குறளில் புகுத்தப்பட்ட இடைச்செருகல். இந்தக் கருத்தைச் சிலர் முன்வைத்து வருவதை உள்ளடக்கித்தான் இதை விவாதிக்க வேண்டும்'' என்கிறார், எழுத்தாளரும் பேராசிரியருமான அருணன்.
.
'ஆதிபகவன்' என்ற வார்த்தை சர்ச்சையைத் தாண்டி இன்னும் சில கருத்துகளை இந்த விழாவில் ஆளுநர் முன்வைத்துள்ளார். 'தமிழில் நான் அறிஞர் இல்லை. ஆனால், கற்ற அறிஞர்கள் பலர் முன்பே மொழிபெயர்த்துள்ளதை வைத்து நான் படித்து வருகிறேன்' என்கிறார்.

'தர்ம சாஸ்த்ரா, நீதி சாஸ்த்ரா ஆகியவற்றைப் பற்றி எல்லாம் ஆளுநர் பேசியிருக்கிறார். மேலும் பித்ரு தர்மா, புத்ர தர்மா பற்றி எல்லாம் திருக்குறள் மாநாட்டில் விளக்கிவிட்டு, 'பக்தி என்பது முழுமையாக ஆதிபகவனிடம் சரணடைவது. ஏழு பிறவிகள் என்பது நமது மக்களின் நம்பிக்கை' என விளக்கமும் அளித்துள்ளார்.

தனது மொத்த பேச்சில் அவர் டார்கெட் செய்தது ஜி.யு,போப்பை மட்டும்தான். 'ஆதிபகவன்' என்பதை Primal Deity' என மொழிபெயர்த்தது நியாயமற்றது' என்பதுதான் ஆளுநரின் வாதமாக உள்ளது.

ஆனால், ஆளுநர் கூறுவதைப்போல் திருக்குறளை முதன்முதலாக மொழிபெயர்த்தது ஜி.யு.போப் இல்லை. அவர் நான்காவது நபராத்தான்
மொழிபெயர்த்தார். அவருக்கு முன்னால் 3 பேர் உள்ளனர். முதலில் மொழிபெயர்த்தவர் ஃபிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis). இது 1812 ஆம் ஆண்டில் நடந்தது. இவர் மொழிபெயர்ப்புடன் மட்டும் நிற்கவில்லை. திருவள்ளுவர் உருவத்தை நாணயத்தில் முதன்முதலாக வெளியிட்டார்.

சரி,, ஆளுநர் கூறும் 'ஆதிபகவன்' என்ற குறளை எல்லீஸ், எப்படி மொழிபெயர்த்தார் எனப் பார்ப்போம். ' As ranked in every alphabet the first the self- same vowel stands, so in all world, the eternal god is chief' என்று மாற்றி இருக்கிறார். அதாவது, 'ஆதிபகவன்' என்பது 'the eternal god is chief' ஆக மாறியுள்ளது.

ஆளுநர் மறைத்த உண்மை:

ஆளுநர் மறைத்த உண்மை:

இதே குறளை பாரதியின் நண்பரும் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையும் பக்தி மார்க்கத்தில் சிறந்த ஈடுபாடும் கொண்ட வ.வே.சு. ஐயரும் 1916 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர், ' A is the starting-point of the world of sound; even so is the Ancient one Supreme the Starting- point of all that exists' என ஆங்கிலப்படுத்தி இருக்கிறார்.

Supreme God என்று ஜி.யு.போப் கூறவில்லை. வ.வே.சு. ஐயர் ஏன் Supreme God என்று குறிப்பிடவில்லை. அவர் தமிழர்தானே? அவர் ஆன்மிக ஞானிதானே? ஐயருக்கும் உள்நோக்கம் இருந்தது என்கிறாரா ஆளுநர்?

இந்தச் சர்ச்சையில் இன்னொரு முக்கியமான தகவலை ஆளுநர் ரவிக்கு நினைவுபடுத்த வேண்டும். அவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆகவே அவர் துறைசார்ந்த ஒரு தகவலைக் கூறுவது நம் கடமை. எஸ்.எம்.டயஸ் (S.M. Diaz) என்ற அதிகாரி, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர், சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியின் (The Sardar Vallabhbhai Patel National Police Academy) முதல் இயக்குநராக இருந்தவர். அங்கே உருவானவர்தான் ஆர்.என்.ரவி. ஆளுநரின் முன்னோடி அதிகாரி இதனை எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் எனப் பார்க்க வேண்டாமா?

'The alphabet begins with A; So does the universe, with God' என்கிறார். இவரும் வெளிநாட்டுக்காரர் இல்லை. தூத்துக்குடி மணப்பாடு பகுதியில் பிறந்தவர். இவர் ஏன் Supreme God என்று கூறவில்லை?

இதில் பலரும் ஏறக்குறைய போப் பயன்படுத்திய 'Primal Deity' என்ற வார்த்தைக்கு இணையான சொல்லையே கையாண்டுள்ளனர். இதை எல்லாம் பார்க்காமல், 'போப் மட்டும் திருக்குறளுக்குத் தீங்கு செய்துவிட்டார் என ஆளுநர் ரவி கேள்வி எழுப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?'

காந்தி சென்னது என்ன?

காந்தி சென்னது என்ன?

இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், 'திருக்குறளைப் படிப்பதற்காகவே அடுத்த ஜென்மத்தில் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்றவர் மகாத்மா காந்தி. அவர், ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

காந்தி, தனது 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகையில் 14-3-1908 ஆம் தேதியிட்ட இதழில், போப் மொழிபெயர்ப்பு குறித்து, 'There have been few Englishmen for whom the people of Madras should bear greater reverence and deeper respect than Dr. Pope' என எழுதியுள்ளார். அதாவது, 'சென்னை மக்கள் மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டியவர்களில் டாக்டர்.போப்பைவிட தகுதியான ஆங்கிலேயர்கள் எவரும் இல்லை' என்கிறார். இதையும் சேர்த்து ஆளுநர் ரவி படிக்க வேண்டும்.

இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் திருக்குறளை 18 பேர் மொழிபெயர்த்துள்ளனர். அதனைச் செம்மொழி நிறுவனம் புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. அதில், காலத்துக்கு ஏற்ப மொழியாக்கமும் மாறி வந்துள்ளது. எந்த மொழிபெயர்ப்பும் நீடித்த நிலையானது அல்ல என்பதே நம் வாதம். அது காலத்துக்கு ஏற்ப எளிமைப்படுத்தப்படும். அதை உணராமல், 'மிஷினரி செய்த சதி' என ஆளுநர் சொல்வதில் நியாயம் இல்லை.

தாகூரின் தேசிய கீதம்:

தாகூரின் தேசிய கீதம்:

அதேபோல. ஆளுநர் ரவி பேசும்போது, 'தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்ற சொல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று நிலப்பரப்பைக் குறிப்பது. ஆனால் திராவிடம் என்றால் தமிழ் மட்டும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் நம் பார்வையைக் குறுக்கிவிட்டன' என்கிறார்.

இதற்கும் மிக எளிய விளக்கத்தைப் பார்த்துவிடுவோம். கூகுளில் 'which is the first dravidian language' என்று நீங்கள் தட்டினால் முதலில் 'தமிழ்' என்றே பொருள் கூறுகிறது. கூகுள் சொல்வதையாவது ஆளுநர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் அருணன்.

தொடர்ந்து பேசும்போது, "பொதுவாக என்னுடன் விவாதங்களில் பங்கேற்கும் வலதுசாரிகள் பலர், 'திராவிடம் என்று தமிழ்நாட்டில்தான் பேசுகிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவில் யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள்?' என்பார்கள். ஆனால் அதற்கு நேர் எதிராக ஆளுநர் 'திராவிடம் என்பதைத் தமிழ் மட்டும் என்று சுருக்கிவிட்டன' என்கிறார். ஆளுநர் சொல்வதே ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கே எதிரானது.

திமுக சொல்வது என்ன?:

திமுக சொல்வது என்ன?:


திமுகவை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் பேசுகிறார். திராவிடம் என்பதை, 'தமிழ் மட்டும்' என்று யாரும் சொல்லவில்லை. மொழியியலாளர்கள் முன்வைத்த கருத்தாக்கத்தைத்தான் திமுக உள்வாங்கிக் கொண்டது. எதையும் புதிதாக திமுக உண்டாக்கவில்லை. கால்டுவெல் போன்ற ஆய்வாளர்கள் சொன்ன கருத்தைத்தான் திமுக முன்வைத்தது. அதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.

'திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிறந்தவை' என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதில்கூட திராவிட மொழிகள் நேரடியாகத் தமிழிலிருந்து பிறக்கவில்லை. Proto-Dravidian எனக்கூறப்படும் ஆதிமொழியிலிருந்தே இவை வந்தன என இப்போது புதிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.

'திராவிட உத்கல வங்கா' எனத் தேசிய கீதத்தில் தாகூர் சொன்னது தென்மாநில நிலப்பரப்பைத்தான் குறிக்கிறது. அதைத்தான் திமுகவும் கூறிவருகிறது. அது தமிழை மட்டுமே குறிக்கிறது என யார் சொன்னது?

திராவிடம் என்பது தமிழா?

திராவிடம் என்பது தமிழா?

'ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு சரியில்லை' என்கிறார் ஆளுநர். 1886 ஆம் ஆண்டில் திருக்குறளை அவர் உலகளவில் கொண்டு சென்றார். சம்ஸ்கிருதத்தில் 1922 ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பு வந்துள்ளதாக விக்கிப்பீடியா தகவல் சொல்கிறது. இவ்வளவு சிறந்த படைப்பை இவர்கள் ஏன் இந்தியா முழுமைக்கும் கொண்டு போய் முன்பே பரப்பவில்லை? திமுகவின் ஐகானாக இருக்கும் வள்ளுவரை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்புகிறது. அதற்கு ஆளுநர் துணையாகச் செயல்படுகிறார். அதுதான் உண்மை" என்கிறார் அருணன்.

'தெற்காசியாவில் 165,000,000க்கும் அதிகமான மக்கள் பேசும் 23 மொழிகளைக் கொண்ட குடும்பம்' என்று திராவிடத்தைக் குறிப்பிடுகிறார் செக் குடியரசின் தமிழ் ஆய்வாளர் கமில் சுவெலபில் (Kamil Zvelebil).

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குருக் ஆகியவை திராவிடக் குடும்பம். இந்தியாவுக்கு வெளியே முழுக்க முழுக்க பேசப்படும் ஒரே திராவிட மொழி பிராகுய். இவை ப்ரோட்டோ-திராவிடன் என்ற ஆதிமொழியிலிருந்து பிறந்தன.

'திராவிட மொழிகளில், மிகப் பழமையான இலக்கிய செழுமை நிறைந்த மொழி, தமிழ்மொழி' என்கிறார் கமில். இவருக்கு முன்னோடியான கால்டுவெல்கூட இதே கருத்தையே முன்வைத்துள்ளார்.

திராவிட மொழிக் குடும்பத்தை ஆய்வு செய்த மொழியியலாளர்கள் தமிழை முதன்மைப்படுத்தினர். அதனை முன்வைத்தே திராவிட இயக்கம் தோன்றியது. ஆகவே, அவர்கள் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு இணையாகப் பார்க்கின்றனர். அதேநேரம், திராவிடம் என்றால் தமிழ் என்று யாரும் கூறவில்லை. குறிப்பாக திமுகவினர் அதைப் பற்றிப் பேசவே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

English summary
Why Governor is talking about Thirukkural, Dravidam? What is the truth in his speech?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X