மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் விசாரணைக்கு ஆளுநர் மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை? ஜோதிமணி கேள்வி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பதன் பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவரது பதவி காலத்தில் போக்குவரத்துத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து ஜி.பி.எஸ் கருவிகளை வாங்குவதில் ஊழல் முறைகேடு நடைபெற்றது; பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையும் நடத்தி இருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளுக்கு ஒப்புதல் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இந்த கோப்பு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது.

ஆளுநர் அனுமதி: இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது; எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகை கோப்புகள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கேசி வீரமணி, எம். ஆர் .விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். இதில் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு ஒப்புதல் தந்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அண்ணாமலை காரணமா?: ஆனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறார். இதன் மர்மம் என்ன? 6.7.2023-ல் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய கோப்பு எதுவும் வரவில்லை என்கிறது. ஆனால் தற்போது மே மாதம் 15-ந் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய கோப்பு வந்துவிட்டது என்கிறார். இப்போது வரை எம்.ஆர். விஜயபாஸ்கர் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்கிற கேள்வியை கேட்காமல் தவிர்க்க முடியாது எனவும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
