பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு.. தமிழக அரசு அனுப்பிய 4 மெசேஜ்.. இதைவிட ஹாப்பி நியூஸ் இருக்க முடியாதே!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து பல்வேறு முக்கிய நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த அறிவிப்புக்கு பின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள். அந்த அறிவிப்புகள் பின்வருமாறு,
அறிவிப்பு 1: முதல் கட்டமாக, அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது புதிய ஊதிய உயர்வு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும். இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 2: உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணமடையும் மற்றும் காயம் அடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளரின் முன்மொழிவைக் கூர்ந்து ஆய்வு செய்த பின்னர், தேர்தல் பணியின் போது இறந்த அல்லது காயம் அடைந்த வாக்குச் சாவடி பணியாளர்கள்/ வாக்குச்சாவடி பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு கருணை இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள், 2024 மற்றும் எதிர்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள்/உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களின் போது பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் இருக்கும் போது அதிகாரி துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தால், அதிகாரியின் அடுத்த உறவினருக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். 10 லட்சத்தில் இருந்து இது உயர்த்தப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 3: அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 4: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் உறுதி: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
என்ன காரணம்?: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து பல்வேறு முக்கிய நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த அறிவிப்புக்கு பின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றுதான் காரணம் என்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற அந்த ரிப்போர்ட்டில், பொதுவாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அதனால் கடும் அதிர்ப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர்.
தபால் வாக்குகள் சரிவு: எண்ணிக்கையின் படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.
பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெரிதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.
ஸ்டாலின் கண்கள் சிவந்தது: இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தபால் வாக்குகளிலேயே திமுக 50 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 45 சதவீதம் மட்டுமே எடுத்திருக்கும் போது, வாக்குப் பதிவில் எந்தளவுக்கு திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வாக்களித்திருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கணக்கிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விவரித்துப் பேசுகிறார்கள்.
திமுகவுக்கு எதிரான மனநிலையில் அரசு ஊழியர்கள் இருந்திருப்பது மட்டுமல்லாமல், இரண்டாவது இடம் வருவதற்கேற்ப பாஜகவை அரசு ஊழியர்கள் ஆதரித்திருப்பதும் உற்று கவனிக்க வேண்டிய விசயம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, திமுக உற்று கவனிக்க வேண்டும் என்கின்றனர்.
இதையடுத்தே ஸ்டாலின் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications