மாஸ்க் போட்ட உதயநிதி.. காரில் கூட யாரும் இல்லை? மேடை மீது அமராத உதயநிதி.. என்ன காரணம்?
மதுரை: மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுக்குழு மேடையில் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உருவப்படங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. திமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயம் போன்று செட் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாட திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திமுகவில் புதிதாக 2 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுகவில் பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மேடை
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் அமராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் இடம்பெற்று இருந்தனர். அமைச்சர்கள் பலரும் கீழே முன் வரிசையில் இருந்தனர். ஆனால் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் மேடையில் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மேடையில் அமரவில்லை. கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார். கீழே முதல்வரிசையில் தனி லைனில் அமர்ந்து இருந்தார். பொதுவாக திமுக கூட்டங்களில் துணை முதல்வர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருப்பார். ஆனால் இன்று அவர் கீழே மற்ற மூத்த அமைச்சர்களுடன் இருந்தார்.
இதற்கு பின் அவரின் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று கூட அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். காரில் தனியாகவே பயணம் செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாகவே அவர் மேடையில் இல்லை என்கிறார்கள்.
அதே சமயம் இது பொதுக்குழு கூட்டம் என்பதால் ஆட்சி பதவி இல்லாமல்.. சீனியாரிட்டி, கட்சி பதவி அடிப்படையில்தான் மேடையில் இடம் ஒதுக்கி உள்ளனர் என்றும் திமுகவினர் கூறுகின்றனர். அதாவது மேடையில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், அமைப்பு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அடிப்படையிலேயே மேடையில் சீட் போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே உதயநிதி மேடையேறவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications