அவசரப்பட்டுட்டீங்களே தம்பி! நீங்க தானா அது? அண்ணாமலைக்கு, மனோ தங்கராஜ் பதிலடி.. முற்றிய மோதல்
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரூ.1 கோடி நஷ்டஈடு கோருவதாக அண்ணாமலை போட்ட பதிவு தொடர்பாக ‛ஒன் இந்தியா தமிழ்' இணையதளத்தில் நியூஸ் கார்டு வெளிவந்து இருந்தது. இதனை பகிர்ந்த மனோதங்கராஜ், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் மனோ தங்கராஜ். இவருக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தற்போது கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது அமைச்சர் மனோ தங்கராஜ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவின் நிறுவனமாகும்.

அதாவது ஆவின் பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியதோடு ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதனை முற்றிலுமாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்தார்.
அதோடு அண்ணாமலையை கடுமையாக அவர் சாடினார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்'' என சாடியிருந்தார். இதனால் அண்ணாமலை டென்ஷன் ஆனார். இதையடுத்து அவர், ‛‛நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையென்றால் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த அமைச்சர் மனோ தங்கராஜ், ‛‛ரபேல் வாட்ச் கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல!'' சீண்டினார். இதற்கு அண்ணாமலை, ‛‛கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்'' எனக்கூறினார்.
இதுபற்றி ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதோடு அண்ணாமலை தெரிவித்த ‛‛அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடருவேன்'' என்ற வாக்கியத்தை கொண்டு நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டது. இந்த கார்டு வலைதளங்களில் பரவ தொடங்கியது. இந்த ‛ஒன் இந்தியா தமிழ்' நியூஸ் கார்டை பார்த்த அமைச்சர் மனோ தங்கராஜ் அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததோடு அதே பதிவில் ரூ.1 கோடி நஷ்டஈடு கோருவதாக கூறிய அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்தார்.
இவ்வளவு தானா!!!
— Mano Thangaraj (@Manothangaraj) November 25, 2023
தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு… pic.twitter.com/g69VU2YU6g
இதுதொடர்பாக அந்த பதிவில் மனோ தங்கராஜ், ‛‛இவ்வளவு தானா! தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலைல எதிர்ப்பு போராட்டம், கனிமவள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தம்பியின் மானநஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வட நாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?'' என விமர்சனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இந்த பதிவை அவர் வளமாகும் பால்வளத்துறை, Aavin4Health எனம் ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். இப்படியாக அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அண்ணாமலை இடையே மோதல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது.












Click it and Unblock the Notifications