வந்தேன்டா பால்க்காரன்.. பால் தொழிலில் பணக்காரர் ஆகப்போகிறாரா அண்ணாமலை? இதான் நிலவரம்
சென்னை: தமிழகத்தில் இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மாட்டுப் பண்ணைத் தொழில், கடந்த சில ஆண்டுகளாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பால் பண்ணை துறையில் கால் பதித்திருக்கும் நிலையில், அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினி பால் பொருட்களை விற்று பணக்காரர் ஆவதை போல அண்ணாமலை ஆகப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பையும் இந்த தொழிலில் தமிழகம் எந்த அளவில் உள்ளது என்பதையும் அறியும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இயற்கை விவசாயம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில், விவசாயிகள் பாரம்பரிய நெல் வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் பஞ்சகாவ்யா, மண்புழு உரம், மீன் அமிலம் போன்ற இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், உற்பத்திச் செலவும் பெருமளவு குறைகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, குறைந்த நீர் தேவையே போதுமானது.
நகரங்களில் அதிகரிக்கும் தேவை!
இயற்கை முறையில் விளைந்த நெல், காய்கறி, பழங்களுக்கு நகரங்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறுகின்றனர். திருவள்ளூர், விழுப்புரம், சேலம் போன்ற மாவட்டங்களில், விவசாயிகள் ஒருங்கிணைந்து புதிய விற்பனை நிலையங்களை அமைத்து, மாதம் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.
சவால்களும் இல்லாமல் இல்லை!
இயற்கை விவசாயம் லாபகரமானது என்றாலும், சில சவால்களும் உள்ளன. ரசாயன விவசாயத்தை ஒப்பிடும்போது, சில சமயங்களில் இயற்கை முறையில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. மேலும், உயிர் உரங்கள் தயாரிப்பு, தொழில்நுட்ப அறிவு, விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல், போக்குவரத்து செலவுகள் மற்றும் சான்றிதழ் பெறுதல் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. இது ஒரு நீண்டகால முயற்சி; உடனடி லாபத்தை எதிர்பார்க்க முடியாது.
நாட்டு மாட்டுப் பண்ணை
தமிழகத்தில் நாட்டு மாடுகளை (காங்கேயம், கிர்) வளர்த்து பால், நெய், கோமயம், உரம், மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து பல விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். நாட்டு மாடுகளின் 'ஏ2 பால்' ஒரு லிட்டர் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. இதனால், பல பண்ணையாளர்கள் மாதம் ரூ.25,000 முதல் ரூ.2,00,000 வரை வருமானம் ஈட்டுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சாணம் மற்றும் கோமியம், இயற்கை உரமாகப் பயன்படுவதால், அது கூடுதல் வருமானத்தை ஈட்டுகிறது.
தொழில்நுட்பமும், சந்தை அறிவும் அவசியம்!
நாட்டு மாடுகளுக்கு குறைந்த தீவனச் செலவு என்றாலும், பண்ணை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முக்கியம். ஆரம்ப முதலீடு, தொழில்நுட்ப அறிவு குறைபாடு, சந்தை தொடர்புகள், மற்றும் அரசு மானியங்கள் கிடைப்பதில் தாமதம் ஆகியவை இந்தத் துறையில் உள்ள முக்கிய சவால்களாகும். மேலும், நாட்டு இனங்களின் மரபணு தூய்மை மற்றும் பால் உற்பத்தி அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.
அண்ணாமலையின் அடுத்த நகர்வு: இது வெறும் தொழிலா அல்லது...?
மொத்தத்தில், இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மாட்டுப் பண்ணை, சரியான திட்டமிடல், முதலீடு, மற்றும் நீண்ட கால அர்ப்பணிப்பு இருந்தால், ஒரு வெற்றிகரமான வணிகமாக மாறும். இந்த பின்னணியில், அண்ணாமலை தனது ஐபிஎஸ் மற்றும் அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இந்தத் தொழிலுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. அவர், தனது தொழில் அனுபவம், தொழில்நுட்ப அறிவு மற்றும் அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, இந்த சவால்களை எப்படி எதிர்கொள்வார், தனது முயற்சியில் வெற்றி காண்பாரா, அல்லது இது அவரது அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான ஒரு தொடக்கமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை வந்தேண்டா பால்க்காரன், பாடலை பாடியபடி, அண்ணாமலைக்கு பெஸ்ட் ஆப் லக் சொல்ல வேண்டியதுதான்.












Click it and Unblock the Notifications