அன்புமணிக்கு ஓர் பிரச்சனை என்றால் நாங்கள் தற்கொலைப் படையாக மாறுவோம்.. பாமக நிர்வாகி ஆவேச பேச்சு
சென்னை: "ராமதாஸை சதி வலையில் இருந்து அன்புமணி மீட்டெடுக்க வேண்டும். அன்புமணிக்கு ஓர் இடர் என்றால் நாங்கள் தற்கொலைப் படையாக மாறுவோம்" என பாமக மூத்த நிர்வாகி ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். வன்னியர் சங்க மாநாட்டிலும் அந்த பிரச்சனை எதிரொலித்தது.

அண்மையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் விவகாரங்கள், குடும்ப விவகாரங்கள் என அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் ராமதாஸ். இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இருவருக்கும் இடையே இன்னும் சமாதானம் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்புமணி. அந்தவகையில் கடலூரில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை அழிக்க நினைப்பவர்களை அழித்தொழிப்போம் என்று அன்புமணி முன்பாக மேடையில் பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பேசிய பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் "வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை மிகச்சிறப்பாக அன்புமணி நடத்தி முடித்தார். மாநாடு முடிந்ததும் கட்சியில் நிலவும் பிரச்சனைகளால் ஒரு மாத காலமாக எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.
1999-ஆம் ஆண்டு கடலூரில் பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாதி தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் தான் அன்புமணி பேசுவார். அந்த பேச்சை ரெக்கார்டு செய்து ராமதாஸிடம் போட்டு காண்பிப்போம். அந்த வீடியோவை சிரித்து சிரித்துக் கேட்டு ரசிப்பார்.
கடலூர் மாவட்டத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வரை என்ன சாப்பிட்டார்? மீட்டிங் எப்படி நடந்தது என்று போன் போட்டு ராமதாஸ் விசாரிப்பார். அந்த அளவுக்கு பாசமானவராக இருந்தார். அவரை சதி வலையில் இருந்து அன்புமணி மீட்டெடுக்க வேண்டும். எங்களுக்கு பழைய ராமதாஸை பெற்று தாருங்கள்.
அன்புமணி தான் பாமகவின் நிரந்தர தலைவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஏதோ ஒரு சதிகார கூட்டம் ராமதாஸை சூழ்ந்துகொண்டு கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமகவை யாரும் அழிக்க முடியாது. கட்சியை அழிக்க நினைப்பவர்களை அழித்தொழிப்போம்.
கட்சியில் பயனற்றுக் கிடக்கும் களைகளை அகற்ற வேண்டும். அழித்தொழிப்பு ஒரு இயக்கத்திற்கு தேவை என்றால் அதை செய்து முடிக்க வேண்டும். அன்புமணிக்கு ஓர் இடர் என்றால் நாங்கள் தற்கொலைப் படையாக மாறுவோம்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications