அதிமுக-பாமகவை வீழ்த்த உதயசூரியனின் நிழலில் தஞ்சமடையுமா தேமுதிக... உரக்க ஒலிக்குமா முரசு!
சென்னை: அதிமுக-தேமுதிக கூட்டணி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவிய பேச்சுகளுக்கு ''கூட்டணியில் இருந்து விலகுகிறோம்'' என்று முரசொலித்து உரக்க சொல்லி விட்டது தேமுதிக.
நாங்க என்ன இப்போ கட்சி தொடங்குன ஜூனியர்களா? இவங்களுக்கு முன்னாடியே கட்சி தொடங்கியவர்கள். இவங்களுக்கு எல்லாம் நாங்கதான் சீனியர். இவங்க கூட நாங்க கூட்டணி போக மாட்டோம். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கத்தியை விட கூர்மையான பதில்களை வீசினார் விஜய பிரபாகரன்.
உதயசூரியனின் நிழலில் தஞ்சமடைவதற்கு முரசுக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. தேமுதிக, உதயசூரியன் வேட்பாளர்களுக்கு தயங்காமல் உதவி செய்யும் என்பது அரசியல் நிபுணர்களின் உறுதியான கருத்து.

உரக்க சொல்லிய தேமுதிக
எப்போது வரும்? வருமா? வராதா? என்று நீண்ட நாட்களாக ஜவ்வாக இழுத்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று ஒருவழியாக விடை கிடைத்து விட்டது. ஆம்... அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியதைத் தான் குறிப்பிடுகிறேன். ''என்ன இவங்க இவ்வளவு சீட் கேட்குறாங்க, இது ஓவரா தெரியல'' ''ஒரு காலத்துல எதிர்க்கட்சியா இருந்த கட்சிக்கு இவங்க கூடுதல் சீட்தான் கொடுத்தா என்ன?'' என்று மக்கள் மத்தியில் நிலவிய பேச்சுகளுக்கு ''கூட்டணியில் இருந்து விலகுகிறோம்'' என்று முரசொலித்து உரக்க சொல்லி விட்டது தேமுதிக.

திமுகவுடன் சேருமா?
திமுகவின் பரம எதிரியான முரசு, எப்படியாயினும் உதயசூரியன் நிழல் தேடாது. நம் பக்கம்தான் வந்தாக வேண்டும் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு கடைசியில் ஏமாற்றமே பரிசாக கிடைத்து இருக்கிறது. சரி... தேமுதிக அடுத்து என்ன செய்ய போகிறது? திமுக பக்கம் ஒதுங்குமா? இல்லை மூன்றாவது அணி அமைத்து கெத்தாக வலம் வரும் மக்கள் நீதி மய்யத்துடன் மையம் கொள்ளுமா? இல்லை சசிகலா மீது வெறுப்பு கொண்டு, அதிமுகவோட சேரவா, வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்கும் அமமுகவுடன் சேர்ந்து கொள்ளுமா? என்பதுதான் அடுத்து வரிசை கட்டி நிற்கும் வினாக்கள்.

அதிமுகவை வறுத்தெடுத்தனர்
இனி இந்த வினாக்களுக்கான விடைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். இன்று கூட்டணி விலகல் அறிவிப்பு வெளியிட்ட உடன் சுதீசும், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் அதிமுகவை வறுத்தெடுத்தனர். அதிலும் விஜய பிரபாகரன், அமைச்சர் ஜெயக்குமாரே பொங்கி எழும் அளவுக்கு ஒரு படி மேலே போய் விட்டார். நீங்க கமல்ஹாசன் கூட்டணியில் சேருவிங்களா, டிடிவி பக்கம் போகிற ஐடியா இருக்கா? என்று விஜய பிரபாகரனிடம் நிருபர்கள் ஒரு கேள்விதான் கேட்டனர்.

நாங்கள் என்ன ஜூனியர்களா?
இதற்கு ஆவேசமாக பொங்கி எழுந்த விஜய பிரபாகரன், ''நாங்க என்ன இப்போ கட்சி தொடங்குனா ஜூனியர்களா? இவங்களுக்கு முன்னாடியே கட்சி தொடங்கியவர்கள். இவங்களுக்கு எல்லாம் நாங்கதான் சீனியர். இவங்க கூட நாங்க கூட்டணி போக மாட்டோம். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி''என்று கத்தியை விட கூர்மையான பதில்களை வீசினார் விஜய பிரபாகரன். அப்போ நம்ம கேள்வியில் இருந்து தினகரனையும், கமல்ஹாசனையும் அப்படியே தூக்கிடலாம்.

திமுகதான் ஆறுதல்
மீதி இருக்கிறது யாரு? திமுக. ''விஜயகாந்த் மண்டபத்தை இடிச்சதே திமுக ஆட்சியில்தான். இவங்களுக்கு அந்த கோபம் அப்படியே இருக்கு. திமுக கூட சேரவே மாட்டோம் என்று பிரேமலதாவே சொல்லியிருக்காங்க'' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதுக்கு நான் பதில் சொன்னா நல்லா இருக்காது. இதுக்கு விஜய பிரபாகரன் என்ன சொல்லியிருக்காருனு நீங்களே பாருங்க '' எங்களின் ஒரே குறிக்கோள் அதிமுக-பாமக படுதோல்வி அடையனும். அவங்களுக்கு நாங்க யாருனு கட்டணும். திமுக நீண்ட கால்மாக ஆட்சியில் இல்லை. அவங்க ஆட்சிக்கு வந்தா நல்லாயிருக்கும்''

பாமக மீது ஆதங்கம்
விஜய பிரபாகரன் சொன்னதை பார்த்திங்களா? அதுவும் கடைசி வரியை நல்லா பார்த்திங்களா? ஆக உதயசூரியனின் நிழலில் தஞ்சமடைவதற்கு முரசுக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. அதிமுகவை விட பாமக மீதுதான் கொலைவெறி கோபத்தில் இருக்கிறது தேமுதிக. பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை. மேலும், அதிமுக, பாமக விடுத்த வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையையும் நிறைவேற்றி, அவங்களுக்கு 23 சீட் கொடுத்ததுதான் காரணம்.

ஸ்டாலினுக்கு நன்கு தெரியும்
பாமகவுக்கு இருக்கும் மதிப்பு கூட நமக்கு இல்லையே எந்த ஆதங்கம் தேமுதிகவுக்கு உள்ளது. இந்த காரணத்துக்காகவாவது தேமுதிக, திமுகவுடன் கைகோர்க்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பாஜக தரப்பில் நிப்பாட்டும் வேட்பாளர்களை திமுக பார்த்துக் கொள்ளும். அதிமுக-பாமக வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் தேமுதிக எதிர்த்து நின்றும், அவர்களை தோற்கடிக்க திமுகவுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டும் என்றும் பலரின் கருத்துகளாக உலா வருகின்றன. விஜயகாந்த் உடல்நிலை காரணமாக முன்பை விட முரசு கொஞசம் பலமிழந்து காணப்பட்டாலும் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் கொஞ்சம் வாக்கு வங்கி இருப்பதை திமுக நன்றாக புரிந்து வைத்திருக்கிறது. மேலும், 2011-ல் தன்னிடம் இருந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தட்டி பறித்த அளவுக்கு பலம் பொருந்திய கட்சி என்பதையும் ஸ்டாலின் அறியாமலில்லை.

ஆதரவு கொடுக்கும்
ஆகவே முரசு எப்போது கேட்டாலும், அதற்கு தனி இடம் கொடுக்க உதயசூரியன் தயாராகவே உள்ளது. ஒருவேளை தேமுதிக, திமுகவுடன் நேரடி கூட்டணியில் இடம்பெறாவிட்டாலும் அதிமுக-பாமக வேட்பாளர்களை தோற்கடிக்க மறைமுகமாக கைகொடுத்து உதவும். அதிமுக-பாமக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதியில் உள்ள தேமுதிக பிரமுகர்கள் பிரசாரம் செய்யலாம். அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் செய்யலாம். திமுக வந்தால் பரவாயில்லை என்றும் கூறியுள்ள
தேமுதிக, உதயசூரியன் வேட்பாளர்களுக்கு தயங்காமல் உதவி செய்யும் என்பதும் அரசியல் நிபுணர்களின் உறுதியான கருத்து.

திமுக வெற்றி எளிதாகும்
மேலும், பாமக, அதிமுக மீது கோபத்தில் உள்ள தேமுதிக, அந்த வேட்பாளர்களுக்கு எதிராக கிராம மக்களிடம் பிரசாரம் செய்யலாம். மக்களை அப்படியே பாமக-அதிமுகவுக்கு எதிராக திருப்பலாம். இவ்வாறு செய்யும்போது திமுக வேட்பாளார்கள் வெற்றி எளிதாகும். எனவே திமுக-தேமுதிக பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications