2 ஆப்ஷன்தான்.. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்தே தூக்க எடப்பாடி முடிவு? கவனிச்சீங்களா? திரை தீ பிடிக்கும்!
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம்.. ஒரு அடிமட்ட தொண்டர் அளவிற்கு கூட மதிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் முன்னின்று நடத்த வேண்டிய பொதுக்குழுவிலேயே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மூலம் அவர் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு.. வெளியே தள்ளாத குறையாக அனுப்பப்பட்டு இருக்கிறார்.
திரை தீ பிடிக்கும் என்று பாடலில் வருவதை போலத்தான் இன்று மொத்த அதிமுக பொதுக்குழுவும் தகதகவென பற்றி எரிந்தது. பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாகவே அதற்கு எதிராக வழக்கு, மேல்முறையீடு காரணமாக பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதனால் காலை 6 மணிக்கே.. சூரியன் உதிக்கும் முன்பே.. பொதுக்குழு நடத்தப்பட்ட வானகரம் ஸ்ரீ வாரு மண்டபமே அனல் கக்கும் கூடாரம் போல சூடாக காணப்பட்டது. பொதுக்குழு நடக்கும்.. கண்டிப்பாக வாக்குவாதம் வரும்.. மோதல் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பையும் விஞ்சும் அளவிற்கு இன்று சில விஷயங்கள் பொதுக்குழுவில் நடந்தன.

வீடு முதல் வீதி வரை அவமானம்
ஓ பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து கிளம்பிய நொடியில் இருந்தே எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் அவர் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டார். அவரை வரவேற்க்க சாலையிலேயே பெரிதாக கூட்டம் இல்லை. "கடல்லயே இல்லையாம்" என்று சொல்வது போல அவரின் ஆதரவாளர்கள் பெரிதாக அவரின் அருகில் இல்லை. இதனால் எடப்பாடிக்கு பின்பாக கிளம்பி அவருக்கு முன்பாகவே ஓபிஎஸ் பொதுக்குழு நடக்கும் வானகரம் வந்துவிட்டார். எடப்பாடியோ ரத்தத்தின் ரத்தங்கள் வெள்ளத்தில் மிதந்து மிக தாமதமாக 1 மணி நேரம் கழித்துதான் வானகரம் வந்தார்.

உள்ளேயும் அவமானம்
வெளியே அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ் கூட்டம் நடக்கும் இடத்திலும் பின்னர் அவமதிக்கப்பட்டார். அவர் காரை உள்ளே விட எடப்பாடி ஆதரவாளர்கள் மறுத்தனர். உள்ளே விட மறுத்த எடப்பாடி ஆதரவாளர்கள், அதன்பின் அவர் காரையும் பஞ்சர் செய்துள்ளனர். அதோடு வெளியே போங்க, வெளியே போயா என்று மண்டபத்திலேயே ஓபிஎஸ்ஸை அவமதிப்பு செய்தனர். அதன்பின் மேடையில் ஏறிய போதும், கூட்டத்தில் பேச முயன்ற போதும் கூட ஒருங்கிணைப்பாளர் என்றும் பார்க்காமல் ஓபிஎஸ்ஸை மிக கடுமையாக விமர்சனம் செய்து.. அவரை கீழே இருந்து தரக்குறைவாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் பேசினர்.

கண்டுகொள்ளகூடவில்லை
ஓபிஎஸ்சோடு ஒன்றாக இருந்த அவரின் பழைய டீம் நிர்வாகிகள் கூட இதை தடுக்கவில்லை. அங்கு நிர்வாகிகளை வரவேற்க வேலுமணி, சி வி சண்முகம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். ஓபிஎஸ் வந்ததும் சட்டென வேலுமணி முகத்தை திருப்பிக்கொண்டார். ஓபிஎஸ் முகத்தை பார்க்காமல் எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர். ஓபிஎஸ்ஸை இதனால் வரவேற்பறையில் யாரும் வரவேற்கவில்லை.

மதிக்கவில்லை
உள்ளே கூட்டத்திலும் ஓபிஎஸ்ஸுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. மொத்தமாக தீர்மானங்களை நிராகரிப்பதாக ஓபிஎஸ் கண் முன்னே கேபி முனிசாமி அறிவித்தார். இன்னொரு பக்கம் இது பொதுக்குழுவே கிடையாது.. இந்த தீர்மானங்களை நிராகரிக்கிறோம்.. நிராகரிக்கிறோம்.. என்று நாக்கை கடித்தபடி ஓபிஎஸ்சை தாக்கி சிவி சண்முகம் பேசினார். அதோடு அவை தலைவர் தமிழ் மகன் உசேனும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடக்கும் என்று, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுமதியே இல்லாமல் பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தார்.

தீர்மானம்
இந்த அறிவிப்பை எதிர்த்து வெளியே சென்ற ஓபிஎஸ் அங்கேயும் அவமதிக்கப்பட்டார். பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேற சென்ற ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசப்பட்டன. அதோடு அவரின் காரும் பஞ்சர் செய்யப்பட்டது. இன்று அவர் நடத்தப்பட்ட விதத்தை பார்க்கையில் அவரை கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பெரிதாக மதிக்கவில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது. மூத்த தலைவர் என்றாலும்.. அவரை கட்சியில் யாரும் பொருட்டாக கூட கருத்தவில்லையோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.

வழக்கு மூலம் தப்பிக்க முடியாது
ஓபிஎஸ்ஸும் ஒற்றை தலைமை தீர்மானத்தை நீண்ட நாட்களுக்கு தடுக்க முடியாது. இப்போது வழக்கு மூலம் அவர் தப்பித்து இருக்கலாம். ஆனால் பொதுக்குழு தீர்மானத்தை எப்போதும் உயர் நீதிமன்றம் தடுக்காது. அதில் தலையிடவும் முடியாது. அடுத்த பொதுக்குழுவிற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் அதற்குள் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி இல்லை என்றால் பொதுக்குழு வாக்கெடுப்பு அடுத்த முறை நடத்தப்பட்டு, அந்த வாக்கெடுப்பை வைத்து கோர்டில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதி பெறப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் 2 ஆப்ஷன்
எந்த வகையில் பார்த்தாலும் ஒற்றை தலைமையை கொண்டு வரும் அதாவது பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் தீர்மானம் கண்டிப்பாக அதிமுகவில் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் ஓபிஎஸ் முன் 2 ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
ஆப்ஷன் 1 - ஓபிஎஸ் சமாதானமாகி எடப்பாடிக்கு மீண்டும் விட்டுக்கொடுப்பது. இதன் மூலம் ஓபிஎஸ் கட்சியில் நீடிக்க முடியும். இழந்த மரியாதை கிடைக்காது என்றாலும், மூத்த தலைவர் என்பதால் ஓரம்கட்டப்படாமல், ஏதாவது ஒரு பதவியை பெற்று அப்படியே கட்சியில் நீடிக்க முடியும்.

பரிதாபம்
ஆப்ஷன் 2 - இல்லை ஓபிஎஸ் முரண்டுதான் பிடிப்பேன் என்றால்.. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட கூட வாய்ப்பு உள்ளது. அவர் இன்று அவமானப்படுத்தப்பட்ட போது வைத்தியலிங்கத்தை தவிர பெரிய தலைகள் யாரும் அவர் உடன் நிற்கவில்லை. இதனால் அவரை எடப்பாடி பொதுச்செயலாளர் ஆன பின் நீக்கினால் கூட யாரும் எதிர்க்க மாட்டார்கள். தனக்கு எதிர்காலத்தில் போட்டி வேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில் எடப்பாடியும் இந்த முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.
3 முறை முதல்வர்.. ஜெயலலிதாவின் நம்பர் 1 சாய்ஸ்.. அதிமுகவில் நம்பர் 2 வாக இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் அப்படிப்பட்ட ஓ பன்னீர்செல்வம் இன்று மிகப்பெரிய அவமானத்தை அதிமுகவில் எதிர்கொண்டது.. அவரின் அரசியல் வாழ்க்கையில் அழிக்க முடியாத கரையாக.. கருப்பு நாளாக அமைய போகிறது!